அரிய நிகழ்வான சூரிய கிரகணம்; தமிழகத்தில் 90 சதவீதம் தெரிந்தது


அரிய நிகழ்வான சூரிய கிரகணம்; தமிழகத்தில் 90 சதவீதம் தெரிந்தது
x
தினத்தந்தி 26 Dec 2019 5:46 AM GMT (Updated: 26 Dec 2019 5:46 AM GMT)

வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் தமிழகத்தில் 90 சதவீதம் தெரிந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் சென்னையில் அபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காணமுடிந்தது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.06 மணியளவில் தொடங்கியது. சூரியனை மெல்ல மெல்ல சந்திரன் மறைத்து கொண்டு வருவதை காண முடிந்தது.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சூரிய கிரகணத்தை அதற்கான கண்ணாடியின் உதவியுடன் பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வமுடன்  பார்வையிட்டனர். சூரியனின் மையப்பகுதியை நிலவு 3 நிமிடங்களுக்கு மேல் மறைத்த‌து. தேனி, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியவில்லை 

சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கொச்சி உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை காண முடிந்தது. திண்டுக்கல், மதுரை, திருச்சியில் முழு வளைவு வடிவ சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது.மதுரை மேலூர் பகுதியில் மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை.

திருப்பூரில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தியாவில் சூரிய கிரகணம்  93 சதவீதம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது 90 சதவீதம் கிரகணம் ஏற்பட்டுள்ளது

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், வடக்கு மரியானா தீவுகள் மற்றும் குவாம் ஆகிய நாடுகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. துபாயில் வளைவு வடிவ சூரிய கிரகணம் தெரிந்த‌து.

கேரளாவின் செரவத்தூரில் சூரிய கிரகணம் மெல்லிய வளையம் போல் காட்சி அளித்தது.

அடுத்த முழு சூரிய கிரகணம் 2020 ஜூன் 21-ல் ராஜஸ்தான், உத்தரகாண்ட், அரியானாவில் தோன்றும். தமிழகத்தில் முழு சூரியகிரகணம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2031 மே 21-ம் தேதி தென்படும் எனவும் கூறப்படுகிறது.

Next Story