15 ஆண்டு ஆகியும் மாறாத சுனாமி சோகம் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி


15 ஆண்டு ஆகியும் மாறாத சுனாமி சோகம் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி
x
தினத்தந்தி 26 Dec 2019 10:00 PM GMT (Updated: 2019-12-27T01:13:39+05:30)

15 ஆண்டு ஆகியும் சுனாமி சோகம் மாறவில்லை. சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

நாகப்பட்டினம், 

15 ஆண்டு ஆகியும் சுனாமி சோகம் மாறவில்லை. சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை நாகை மாவட்டத்தில் ஆறாத வடுவை உண்டாக்கியது. இதில் 6 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்தனர். நீங்காத சோகத்தின் நினைவு நாள் 15-வது ஆண்டாக நேற்று நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

சுனாமி எனும் ஆழிப்பேரலையால் நாகை மாவட்டத்தின் 64 மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலையே கடவுளாக வழிபட்டு, நண்பனாக நினைத்து விளையாடி மகிழ்ந்த கடலோர மக்கள், அந்த கடலிலேயே தங்கள் உறவுகளை பறிகொடுத்த சோகத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரும் வகையில் நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் தர்ப்பணம் செய்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடலோர பகுதிகளில் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் கிராமம் சார்பில் அங்குள்ள நினைவு சின்னத்தில் பொதுமக்கள் சார்பில் ஆத்மசாந்தி யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து கீச்சாங்குப்பம் பொதுமக்கள் நினைவு தூணில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவ- மாணவிகளின் மவுன ஊர்வலம் நடந்தது.

பின்னர் பள்ளியில், சுனாமியில் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி குத்துவிளக்கு ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் டாடா நகர் சுனாமி குடியிருப்பில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அக்கரைப்பேட்டை கடற்கரையில் நிறைவடைந்தது. பின்னர் அங்குள்ள நினைவு தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ் கொண்டாட வேளாங்கண்ணி வந்த சுற்றுலா பயணிகளில் ஏராளமானவர்கள் சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் இருந்து பேராலய அதிபர் பிராபகர் தலைமையில் பொதுமக்கள் மவுன ஊர்வலமாக சென்று நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

சுனாமி நினைவு நாளான நேற்று மீனவ பெண்கள் கடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாகவே இருந்தது. சுனாமி பேரலை தாக்கி 15 ஆண்டுகள் கடந்து இருந்தாலும், மீனவர்கள் தங்களது உறவினர்களை இழந்த தாக்கதில் இருந்து இன்னும் மீளவில்லை என்றே சொல்லலாம்.

Next Story