தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நிறைவு


தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நிறைவு
x
தினத்தந்தி 27 Dec 2019 12:28 PM GMT (Updated: 27 Dec 2019 12:28 PM GMT)

தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்தது.

சென்னை,

தமிழகத்தில்  27 மாவட்டங்களில் உள்ள  ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 

வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்தனர். 2,546 ஒன்றிய வார்டு உறுப்பினர், 4,700 ஊராட்சி தலைவர், 37,830 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

24,680 வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணி வரை 1.30 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.

தேனி, கடலூர், திண்டுக்கல், மதுரை, குமரியில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று ஓட்டு எண்ணும் இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

பல வாக்கு சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் அவர்களுக்கு 5 மணிக்குள் டோக்கன் கொடுக்கப்பட்டு, பின்னர், டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 30-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

Next Story