‘வெப் கேமரா’ மூலம் நேரடி கண்காணிப்பு: சென்னையில் இருந்து வாக்குப்பதிவை பார்வையிட்ட தேர்தல் ஆணையர்


‘வெப் கேமரா’ மூலம் நேரடி கண்காணிப்பு: சென்னையில் இருந்து வாக்குப்பதிவை பார்வையிட்ட தேர்தல் ஆணையர்
x
தினத்தந்தி 28 Dec 2019 12:00 AM GMT (Updated: 2019-12-28T03:31:46+05:30)

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டது. இதனை மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி பார்வையிட்டார்.

சென்னை,

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது.

அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் நடத்திய ஆய்வில் 8 ஆயிரத்து 633 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டிருந்தன.

அந்த மையங்களில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதில் 1,709 வாக்குச்சாவடி மையங்கள் ‘வெப் கேமரா’ வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. 2 ஆயிரத்து 842 வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகள் ‘வீடியோ’ பதிவு செய்யப்பட்டது.

பதற்றமான வாக்குச்சாவடிகளின் கள நிலவரத்தை கண்காணிப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டிருந்தது.

இதில், வாக்குச்சாவடிகளில் பதிவான ‘வெப் கேமரா’ காட்சிகள் ‘லேப்-டாப்’ வழியாக பெரிய திரை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. இப்பணியில் மாநில தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி, செயலாளர் இல.சுப்பிரமணியன் ஆகியோரும் நேரடியாக தேர்தல் வாக்குப்பதிவை பார்வையிட்டனர்.

மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர் களை மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்குப்பதிவு எப்படி நடக்கிறது? கள நிலவரம் என்ன? எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது? போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.

Next Story