ஜார்கண்ட் முதல் மந்திரி பதவியேற்பு விழா; மு.க. ஸ்டாலின் ராஞ்சிக்கு புறப்பட்டார்


ஜார்கண்ட் முதல் மந்திரி பதவியேற்பு விழா; மு.க. ஸ்டாலின் ராஞ்சிக்கு புறப்பட்டார்
x
தினத்தந்தி 29 Dec 2019 3:21 AM GMT (Updated: 29 Dec 2019 5:39 AM GMT)

ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள மு.க. ஸ்டாலின் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றார்.

சென்னை,

81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

ஓட்டு எண்ணிக்கை முடிவில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி 46 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  பா.ஜனதா, 26 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாணவர் சங்கம், சுயேச்சைகள் ஆகியோர் தலா 2 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

இதனை அடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் மற்றும் கூட்டணியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக பதவியேற்க முடிவானது.  அவர் இன்று நடைபெறும் அதற்கான விழாவில் பதவியேற்று கொள்கிறார்.  

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து சோரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோன்று பல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது.  இதற்கான விழாவில் கலந்து கொள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விமானத்தில் இன்று காலை ராஞ்சி நகருக்கு புறப்பட்டு சென்றார்.  அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி ஆகியோரும் விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.

Next Story