கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை


கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 29 Dec 2019 5:05 AM GMT (Updated: 29 Dec 2019 5:05 AM GMT)

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.

ராமேசுவரம்,

தமிழகத்தின் ராமேசுவரம் மற்றும் இலங்கையின் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது கச்சத்தீவு.  கடந்த 1976ம் ஆண்டு வரை இந்திய அரசின் உரிமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த இங்கு இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்து உள்ளனர்.

தமிழக மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி உள்ளனர்.

இலங்கை அரசுக்கு உட்பட்ட நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்தனர் என கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்து சென்றனர்.  அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.  இந்நிலையில் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story