திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் - திடீர் ஆய்வு


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் - திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Dec 2019 8:48 PM GMT (Updated: 29 Dec 2019 8:48 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் திடீர் ஆய்வு நடத்தினார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று முன்தினம் வந்தார். அவரை கோவில் செயல் அலுவலர் அம்ரித், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று அதிகாலையில் 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தில் தலைமை செயலாளர் சண்முகம், அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தலைமை செயலாளர் சண்முகம் திடீரென ஆய்வு செய்தார். ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள யாத்ரீகர்கள் நிவாஸ் அமையும் இடத்தில் பழைய கட்டிடங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதனை அவர் பார்வையிட்டார்.

பின்னர் மூவர் சமாதி அருகில் அறுபடை வீடு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.6 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள நிரந்தர நவீன வாகன நிறுத்தும் இடத்தை பார்வையிட்டார். வள்ளிகுகை பகுதியில் இருந்து கோவில் கடற் கரை வரை 520 மீட்டர் நீளத்துக்கு ரூ.19.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர் திட்ட வரைபடத்தையும், இடத்தையும் பார்வையிட்டார்.

மேலும் புதிதாக அமைய உள்ள கிரி பிரகார மண்டபத்தின் வரைபடத்தை ஆய்வு செய்தார். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குளியலறைகள், குடிநீர் வசதி ஆகியவற்றை கூடுதலாக அமைப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் புனித தீர்த்தமான நாழிகிணற்று பகுதிக்கு சென்று பார்வையிட்டார். சுமார் 1½ மணி நேரம் இந்த ஆய்வு பணி நீடித்தது. அப்போது கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பக்தர்கள் தேவைகளை நேரில் கண்டறிந்தார். தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது, கோவில் கட்டுமான உதவி செயற்பொறியாளர் முருகன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story