சென்னை ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை வழக்கு; விசாரணையை துரிதப்படுத்த சி.பி.ஐ.யிடம் தந்தை வலியுறுத்தல்


சென்னை ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை வழக்கு; விசாரணையை துரிதப்படுத்த சி.பி.ஐ.யிடம் தந்தை வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Dec 2019 8:29 AM GMT (Updated: 31 Dec 2019 8:29 AM GMT)

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தும்படி அவரது தந்தை சி.பி.ஐ.யிடம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த கேரள மாணவி பாத்திமா கடந்த நவம்பர் 8ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மனமுடைந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் அவருடைய செல்போனில் ஆய்வு செய்ததில் ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  மாணவியின் தற்கொலை பிரச்சினை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் சில இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். ஐ.ஐ.டியிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் அவரின் பெற்றோர் தங்கள் மகள் சாவுக்கு அங்குள்ள சில பேராசிரியர்கள் காரணம் என்று குற்றம் சாட்டினர்.  இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் சந்தித்து புகார் செய்தார்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இந்த நிலையில் மாணவி தற்கொலை குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.

பேராசிரியர் சுதர்சன பத்மநாபன், பாத்திமாவின் தோழிகள், சகோதரி, அவருடைய விடுதி தோழியான சூளைமேட்டை சேர்ந்த மாணவி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.  பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, ஆதாரங்களை திரட்டினர்.  இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் இன்று சென்றார்.  இந்த வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என சி.பி.ஐ. அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தி கூறினார்.

Next Story