ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்,
தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
இதையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, ராக்கால அபிஷேகம், தீபாராதனை, இரவில் ஏகாந்த தீபாராதனை, பள்ளியறை தீபாராதனை நடந்தது.
சாமி தரிசனம்
கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்றுமுன்தினம் இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த பக்தர்களும், கோவில் வளாகத்தில் தங்கியிருந்து, முருக பெருமானின் திருப்புகழை பாடி வழிபட்டனர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் வெளிப்பிரகாரத்தில் ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர்.
திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story