குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்று பா.ஜ.க. மகளிரணியினர் வீடுகளில் ஆதரவு கோலம்
குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்று பா.ஜ.க. மகளிரணியினர் தங்களுடைய வீடுகளில் ஆதரவு கோலம் போட்டனர்.
சென்னை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோலம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனை முறியடிக்கவும், பதிலடி கொடுக்கும் வகையிலும் பா.ஜ.க. மகளிரணியும் கோலம் போடும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மகளிரணியினர் தங்களுடைய வீடுகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், வரவேற்றும் நேற்று கோலம் போட்டனர். அதில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு முறை வேண்டும் என்றும், தாங்கள் அதனை முழுமனதோடு ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
வரவேற்பு
பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பட்டம்மாள் சாலையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு குடியுரிமை திருத்த சட்டம் வேண்டும், அந்த சட்டத்தை ஆதரிப்பதாக பா.ஜ.க.வின் சின்னமான தாமரை மலர்களுடன் கோலம் போட்டிருந்தார்.
இதேபோல சென்னையில் பல இடங்களிலும் பா.ஜ.க. மகளிரணியினர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கோலம் போட்டிருந்தனர். இந்து முன்னணி நிர்வாகிகளும் சென்னையில் பல்வேறு இடங்களில் கோலம் போட்டு குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு முறைக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
எதிர்மறை நோக்கம்
இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறுகையில், “இந்துக்கள் பாரம்பரியப்படி நேர்மறையான சிந்தனைகளுக்காக கோலம் போடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் தி.மு.க. எதிர்மறையான நோக்கங்களுக்காக, எதிர்ப்பு அரசியலுக்காக கோலத்தை தவறாக பயன்படுத்துகிறது. எனவே தி.மு.க.வின் எதிர்ப்பு அரசியலுக்கு பெண்கள் செவி சாய்க்க வேண்டாம். எனவே பெண்கள் வழக்கம்போல மார்கழி மாதத்தில் கோலம் போடுங்கள்” என்றார்.
Related Tags :
Next Story