பிரதமர், அமித்ஷா குறித்த பேச்சு தொடர்பாக நெல்லை கண்ணனுக்கு நீதிமன்ற காவல்
நெல்லை கண்ணன், இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜனவரி 13 ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை,
நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை விமர்சனம் செய்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை நெல்லை கண்ணன் அவதூறாக பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அவர் மீது மேலப்பாளையம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் அறை எடுத்து தங்கியிருப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று நெல்லை கண்ணனை கைது செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்து மேலப்பாளையம் போலீசார் பெரம்பலூருக்கு சென்றனர். அவர்களிடம் நெல்லை கண்ணனை பெரம்பலூர் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை மேலப்பாளையம் போலீசார் நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
நெல்லை கண்ணனை இன்று, நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு, நெல்லை கண்ணனின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிய பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மருத்துவ பரிசோதனை முடிந்தபிறகு நெல்லை கண்ணனை, நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 13ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story