தி.மு.க.வின் வெற்றியை பறிக்க அ.தி.மு.க. முயற்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மு.க.ஸ்டாலின் பேட்டி


தி.மு.க.வின் வெற்றியை பறிக்க அ.தி.மு.க. முயற்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2020 11:45 PM GMT (Updated: 2 Jan 2020 10:55 PM GMT)

“உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை பறிக்க அ.தி.மு.க. முயற்சி செய்கிறது. தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு எடுப்போம்” என மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. இந்தநிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோரும் வந்தனர்.

அங்கு தலைமை தேர்தல் கமிஷனர் பழனிசாமியை, மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. செய்யும் சதி

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நேற்று) காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஏறக்குறைய 85 சதவீதத்துக்கு மேல் எங்களுடைய கூட்டணி எல்லா இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் அ.தி.மு.க. அரசு, அதிகாரிகள், போலீசாரின் துணையோடு, திட்டமிட்டு, சதி செய்து பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில், தொகுதியில் உள்ள எடப்பாடியில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய வெற்றியை இதுவரை அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது.

தி.மு.க.வின் வெற்றியை அறிவிக்காதது ஏன்?

சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் தொகுதியில் 800 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார். அதை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அதே பகுதியில் சில அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். அதை அறிவித்துவிட்டு பிறகுதான் இதை அறிவிப்போம் எனக் கூறி அதிகாரிகள் கலைந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கொங்கநாதபுரம், எடப்பாடி, சங்ககிரி, போன்ற பகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாகவும், முன்னணியில் இருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. அவற்றையும் இதுவரை அறிவிக்கவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேசன், வாக்கு எண்ணும் மையத்திலேயே இருந்து கொண்டு, செல்போன் மூலமாக கூறிவரும் வழிகாட்டுதலின்படித்தான் அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளன. திண்டுக்கல் வத்தலக்குண்டு ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் 112 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதையும் அறிவிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்கள்.

ஆளுங்கட்சியின் முறைகேடு

மீஞ்சூர் ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் 176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதையும் இன்னும் அறிவிக்கவில்லை. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் உள்ள போடி ஒன்றியத்தில், தி.மு.க. முன்னணியில் இருக்கிறது. அதையும் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள். தூத்துக்குடி பூதலூர் ஒன்றியத்தில் தி.மு.க. முகவர்களை அடித்து விரட்டிவிட்டு, அங்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை வைத்து வாக்குகளை எண்ணுகின்றனர். வந்தவாசி கீழ்கொவலவேடு ஒன்றியத்தில் 1-வது வார்டிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், 3 வாக்குப் பெட்டிகளையே காணவில்லை.

இவையெல்லாம் திட்டமிட்டு நடைபெறுகிறது. இதுபோல் பல இடங்களில் ஆளும்கட்சி முறைகேட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. தி.மு.க. பல இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது என்ற காரணத்தால், இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

போராட்டம் நடத்தலாமா?

எனவே நேரடியாகவே தேர்தல் ஆணையரை நானே வந்து சந்தித்து புகார்களை அளித்திருக்கிறேன். இது போன்று பல புகார்களைச் சொல்லி இருக்கிறோம். எந்த பதிலும் இல்லை. இதற்காவது பதில் வேண்டும் என்று கூறி இருக்கிறோம். எங்கள் முன்னிலையிலேயே தேர்தல் ஆணையர் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் அழைத்து புகார்கள் குறித்துப் பேசினார். 30 நிமிடங்களில் நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதியையும் அளித்திருக்கிறார். அந்த உறுதியை நம்பித்தான் நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்கிறோம்.

நீதிமன்றத்துக்கும் இந்த பிரச்சினையை எடுத்துச் செல்ல இருக்கிறோம். அங்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒரு நல்ல முடிவு வரவில்லை என்றால், அடுத்தகட்டமாக தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கலாமா? அல்லது நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து முடிவெடுப்போம். முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையமும் துணைபோவது வேதனை.

நீதிமன்றத்தை நாடுவோம்

தேர்தலுக்கு முன்பு முதல்- அமைச்சர் முதல் அமைச்சர்கள் அனைவரும், தோல்வி பயம் காரணமாக தி.மு.க. தேர்தலை நிறுத்தப் பார்க்கிறது என சொன்னார்கள். இப்போதும் தோல்வி பயம் காரணமாகத்தான் தி.மு.க. தேர்தல் ஆணையத்தை நாடி உள்ளது என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள்தான் இப்போது தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்கிறார்கள். வெற்றியைத் தடுப்பதால்தான் நீதிமன்றத்தை நாட உள்ளோம். முன்னர் முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றத்திற்கு சென்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story