மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு நெல்லை கண்ணனை 13-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு சேலம் மத்திய சிறைக்கு மாற்றம்
நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நெல்லை கண்ணனை வருகிற 13-ந் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். நெல்லை கண்ணன் மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து நடந்த கூட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக பா.ஜனதாவினர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
பெரம்பலூரில் கைது
அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் திருச்சி அருகே உள்ள பெரம்பலூரில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லைக்கு அழைத்து வந்தனர். நேற்று காலை 7.30 மணி அளவில் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே அவர் மீது மேலும் 2 பிரிவுகளில் மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்
பின்னர் அங்கு இருந்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாபு முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர்.
அப்போது மாஜிஸ்திரேட்டு பாபு, நெல்லை கண்ணனிடம் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரத்தை கூறினார். பின்னர் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், சிறைக்கு அனுப்ப உத்தரவிடக்கூடாது என்று அவருடைய ஆதரவு வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் அவரை விடுவிக்க பா.ஜனதா வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீண்ட நேர விவாதத்துக்கு பிறகு, மாஜிஸ்திரேட்டு பாபு, போலீசார் தாக்கல் செய்திருந்த ஆவணங்களை பார்வையிட்டு நெல்லை கண்ணனை வருகிற 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து மேலப்பாளையம் போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு புறப்பட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த அரசியல் கட்சியினர், ஆதரவு வக்கீல்கள் அவரை சிறையில் அடைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். போலீஸ் ஜீப்பை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி ஜீப் செல்ல வழி செய்தனர்.
பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அடைக்கப்பட்டார். கோர்ட்டு வளாகத்துக்கு முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. உள்பட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.
சேலத்துக்கு மாற்றம்
நெல்லை கண்ணனை சிறைக்கு அழைத்து சென்றதை கண்டித்து அரசியல் கட்சியினர், வக்கீல்கள் கோர்ட்டு முன்பு உள்ள நெல்லை-தூத்துக்குடி மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணனை திடீரென்று சேலம் மத்திய சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்புடன் சேலத்துக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story