பொங்கல் பரிசு தொகுப்பு: ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளித்தது தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்தது.
சென்னை,
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு ஆகிய பொருட்களுடன் ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்த நிலையில், இடையில் உள்ளாட்சி தேர்தல் வந்ததால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் ரேஷன் கடைகள் மூலம் இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்து உள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க, தெரு வாரியாக குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எந்தெந்த நாட்களில் எந்தெந்த தெருக்களில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை முன்கூட்டியே கடைகளின் முன்பு அட்டவணையாக ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story