தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் பெண்களுக்கு தொழிற்பயிற்சி கருத்தரங்கம் சென்னையில் நாளை நடக்கிறது


தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் பெண்களுக்கு தொழிற்பயிற்சி கருத்தரங்கம் சென்னையில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 4 Jan 2020 3:01 AM IST (Updated: 4 Jan 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெண்களுக்கான தொழிற்பயிற்சி கருத்தரங்கம் நடக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் மற்றும் மகளிர் சேவை டிரஸ்ட் சார்பில் ஜனவரி 2020 தொடங்கி 2021 வரை 13 மாவட்டங்களில் தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெண்களுக்கான தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வயது தடை இல்லை. எந்தவிதமான கட்டணமும் கிடையாது.

இந்த பயிற்சி முகாமில் சாக்லேட், பேக்கரி, கிளாத் பிரிண்ட், ஹெர்பல் நாப்கின், ஜூஸ், சோப் ஆயில், பினாயில், சாம்பிராணி போன்றவைகளை தயாரிப்பது எப்படி என்பது பற்றி நேரடி பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சிக்கு தேவையான பொருட்கள் எங்கு குறைந்த விலையில் கிடைக்கும் என்பது பற்றியும், உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கான உத்திகள் குறித்த தகவல்களும் அளிக்கப்படுகிறது.

உதவியாக அமையும்...

இத்துடன், தனியார் நிறுவனங்களின் 6 சிறு, குறு வினியோக உரிமை பற்றிய தகவல்கள், மானியத்துடன் கூடிய மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட இருக்கிறது. புதியதாக தொழில் தொடங்குபவர்கள் தங்களது தொழிலை பதிவு செய்வது எப்படி? என்பது குறித்து தகுந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கமானது 11 ஆண்டுகளாக சேவை மனப்பான்மையுடன் இயங்கி வருகிறது. தொழில் முனைவில் ஒருங்கிணைந்த உத்தியை கையாண்டு பரந்த தொழில் முனைவு தளத்தை உருவாக்குவதே சங்கத்தின் முதன்மை நோக்கமாகும். தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டு 11 மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். இந்த கருத்தரங்கம் தமிழகத்தில் உள்ள பல பெண்களுக்கு தொழிற் தொடங்க உதவியாக அமையும். இதன்மூலம் அவர்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

தொழிற்பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். 7871702700, 7358244511 என்ற எண்ணில் தங்களது பெயர், ஊர் பெயரை குறிப்பிட்டு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்க வேண்டும்.

ஒப்பந்தம்

பல வகையான பயிற்சிகள் இந்தியன் வங்கி மூலம் இலவசமாக அளிக்கப்படும். இந்தியன் வங்கியில் கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். இதற்காக இந்தியன் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இந்தியன் வங்கி தலைவர் பத்மஜா சந்துரு, வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன், இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story