வாக்கு எண்ணிக்கையின் போது பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


வாக்கு எண்ணிக்கையின் போது பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Jan 2020 3:22 AM IST (Updated: 4 Jan 2020 3:22 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கையின் போது பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை முடிந்த இடங்களில் முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் நேற்று முன்தினம் இரவு விசாரித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

கண்காணிப்பு

அதில், 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 கோடியே 42 லட்சத்து 344 வாக்காளர்கள் தலா 4 வாக் குகள் வீதம் 8 கோடியே 1 லட்சத்து 69 ஆயிரத்து 376 வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வாக்குகளை எண்ணும் பணியில் ஒரு லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மொத்தம் 315 மையங்களில் 16 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. இந்த மையங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை தேர்தல் விதிகளின்படி முறையாக நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மறுவாக்கு எண்ணிக்கை

அப்போது தி.மு.க. தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, சேலம், கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஏற்காடு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வாக்கு எண்ணிக்கை மையத்தையே மூடி மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் சட்ட ரீதியாக மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும். ஆளுங்கட்சியினருக்கு துணைபோன தேர்தல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

நேர்மையை நிரூபிக்கலாமே?

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சுந்தரேசன், ‘வாக்கு எண்ணிக்கை எல்லா இடங்களிலும் முறையாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளது. மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் வழக்கில் தான் கோர முடியும். மனுதாரர் தரப்பில் வழக்கில் உள்ள கோரிக்கையை விடுத்து வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.

சேலம், கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முதலில் சரிவர நிரூபிக்கப்பட்டால் மட்டுமே மறுவாக்கு எண்ணிக்கை கோர முடியும்’ என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதி, ‘வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற்றது என்பதை நிரூபிக்கும் வகையில் மாநில தேர்தல் ஆணையம் கண்காணிப்பு கேமராக்களின் சில பதிவுகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யலாமே?’ என்று கேள்வி எழுப்பினார்.

பாதுகாக்க வேண்டும்

அதற்கு மாநில தேர்தல் ஆணையம் மூத்த வக்கீல், ‘வாக்கு எண்ணும் பணி இன்னும் முடிவடையவில்லை என்பதால் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தற்போது தாக்கல் செய்ய முடியாது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அவை அந்தந்த மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்படும். இதுதொடர்பாக விரிவாக பதில் மனு தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு இந்த கோர்ட்டு உத்தரவிட்டால், அந்த பதிவுகளை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘மாநில தேர்தல் ஆணையம் வருகிற 20-ந்தேதிக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். ‘அதுவரை கண்காணிப்பு கேமரா பதிவுகளை பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Next Story