கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை நிலைநாட்டும் அ.தி.மு.க.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தாலும், கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது.
சென்னை,
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.வின் இரும்பு கோட்டையாக விளங்கி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா கொங்கு மண்டலத்துக்கு தனி கவனம் செலுத்தி வந்தார். ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி. மு.க.வுக்கு கைகொடுக்கும் மாவட்டங்களாக அந்த மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் கோவை மாவட்டத்தில் அதிக தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. ஆட்சி அமைக்க கொங்கு மண்டலம் தான் கைகொடுத்தது. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. 9 தொகுதிகளை கைப்பற்றியது. இதே நிலை மற்ற கொங்கு மாவட்டங்களிலும் நீடித்தது.
கூடுதல் இடங்கள்
2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி. மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது. குறிப்பாக கோவை மாவட்ட கவுன்சிலில் மொத்தம் உள்ள 17 வார்டுகளில் 16 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
ஆனால் தற்போது தி.மு.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வின் செல்வாக்கை அசைத்து பார்த்துள்ளது. உதாரணத்துக்கு கோவை மாவட்ட கவுன்சிலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் தி.மு.க. 5 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 10 இடங்களை கைப்பற்றியது.
இதே போல மொத்தம் உள்ள 155 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அ.தி.மு.க. 84 இடங்களிலும், தி.மு.க. 51 இடங்களில் வெற்றி பெற்றதின் மூலம் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
இது தவிர ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளிலும் தி.மு.க.வுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.
திருப்பூர், ஈரோடு
திருப்பூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் அ.தி.மு.க.வே கைப்பற்றியது. தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 13 இடங்களிலும், தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடந்த மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலில் மொத்தம் உள்ள 19 இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 13 இடங்களிலும், தி.மு.க. 5 வார்டுகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அனைத்திலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றது. தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது நடந்த தேர்தலில் தி.மு.க. 5 இடங்களில் வெற்றி பெற்று தனது வாக்கு வங்கியை அதிகரிக்க செய்துள்ளது. இதேபோல், 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலை காட்டிலும் தற்போது நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிகளவில் பதவிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு தேர்தலில் 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. ஆனால் தற்போது அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் 13 இடங்களையும், தி.மு.க. 4 இடங்களையும் பிடித்து உள்ளன. இதன் மூலம் தி.மு.க.விற்கு வாக்கு சற்று அதிகரித்து உள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் தி.மு.க.வின் வாக்கு வங்கி உயர்ந்து உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 65 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்று உள்ளன.
தி.மு.க. வாக்குகள் உயர்வு
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலை ஒப்பிடும்போது தற்போதைய தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கணிசமான வெற்றியை பெற்று உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தளி ஒன்றியத்தில் தி.மு.க.வும், கெலமங்கலம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் வெற்றி பெற்றது. தற்போதும் அந்தந்த ஒன்றியங்களை தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்டும் தக்க வைத்துள்ளது.
கடந்த தேர்தலில் ஓசூர், சூளகிரி, மத்தூர், ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட 8 ஒன்றியங்களிலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ஆனால் இந்த தேர்தலில் ஓசூர், சூளகிரி ஒன்றியங்களில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மற்ற ஒன்றியங்களில் அ.தி.மு.க.வின் வாக்குகள் குறைந்துள்ளது. ஆனால் அந்த ஒன்றியங்களில் தி.மு.க.வின் வாக்குகள் கடந்த தேர்தலைவிட தற்போது அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க. செல்வாக்கு
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு கூடுதல் இடம் கிடைத்தாலும், அ.தி.மு.க.வே இங்கு செல்வாக்குடன் முதல் இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story