முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்


முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்
x
தினத்தந்தி 4 Jan 2020 4:48 AM GMT (Updated: 4 Jan 2020 4:48 AM GMT)

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார்.

சென்னை

அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன்  கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு  காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சென்னையில் உள்ள போரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

பி.எச் பாண்டியன்  நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் பிறந்தவர்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பி.எச்.பாண்டியன். திருநெல்வேலி மாவட்டத்தில், சேரன்மகாதேவி சட்டப்பேரவை தொகுதி இருந்தபோது 1977, 1980, 1984, 1989-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றிருந்தார். 1999 திருநெல்வேலி மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு வென்றுள்ளார்.

இவரது மகன் மனோஜ்பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பி.எச். பாண்டியன் மனைவி சிந்தியா பாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்தவர். அவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது ஜானகி அணியில் பி.எச்.பாண்டியன் இருந்தார். போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றிய காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பி.எச்.பாண்டியன் பேசும்போது, ``அதிமுக தற்போது தூய்மை அடைந்திருப்பதாகவும், கட்சியில் உண்மை தொண்டர்களுக்கு இனி நல்லகாலம்” எனவும் பேசியிருந்தார்.

Next Story