முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவு: தலைவர்கள் இரங்கல்
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சென்னை
பி.எச்.பாண்டியன் மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பி.எச். பாண்டியன் மரணமுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம். அதிமுகவின் தொடக்கக் காலத்தில் இருந்து கொள்கை உறுதிமிக்கத் தொண்டராகப் பணியாற்றியவர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று அவர் ஆற்றிய பணிகள் அதிமுகவுக்குப் பேருதவி புரிந்தன. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த வழக்கறிஞராகவும், பேச்சாளராகவும், அரசியல் வல்லுநராகவும், சட்டப்பேரவை சபாநாயகராகவும், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராகவும், கழக நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் பணியாற்றிய பி.எச்.பாண்டியன், வரலாற்றின் பாகங்களில் இடம்பெறுவார். அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையில்லை. பி.எச்..பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என கூறி உள்ளார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்து உள்ளார். பி.எச்.பாண்டியன் தென் தமிழக மக்களின் வலுவான பிரதிநிதி, சபாநாயகர் அதிகாரத்தை நிலைநிறுத்தியவர் ஆவார்.
அமைச்சர் ஜெயக்குமார் பி.எச்.பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என கூறி உள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ அவரது மறைவு தென் மாவட்டங்களுக்கு பேரிழப்பு , முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பக்கபலமாக இருந்தவர் என்றும் கூறினார்
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறந்த வழக்கறிஞர், சட்டப்பேரவை சபாநாயகராக இருந்து அன்றைய முதல்வர் எம்ஜிஆரின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்தார். அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து புன்முறுவல் தவழும் முகத்துடன் அனைவரிடமும் பேசிப் பழகும் பண்பாளர். என்னிடத்தில் மிகுந்த நட்பு கொண்டிருந்தார். நாடாளுமன்ற மக்களவையில் மிகச் சிறப்பாக அவர் பணியாற்றினார். இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர். இப்படி திடீரென இயற்கை எய்தியது அறிந்து மிக மிக வேதனைப்படுகிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டப்பேரவை சபாநாயகராக பொறுப்பேற்றுத் திறம்படச் செயல்பட்டவர். சட்டப்பேரவை சபாநாயகராகப் பணியாற்றிய காலத்தில் அவரது சில முடிவுகள் சர்ச்சைக்குள்ளானாலும், பல்வேறு விஷயங்களில் மிகவும் துணிச்சலாக முடிவெடுத்தவர். அவர் சிறந்த கல்வியாளரும், வழக்கறிஞரும் ஆவார். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். பாமகவின் சமூக நீதிக் கொள்கையையும், அதற்காக நான் நடத்திய போராட்டங்களையும் பல்வேறு தருணங்களில் அவர் வெளிப்படையாகப் பாராட்டியிருக்கிறார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சபாநாயகர் என்பவர் நடுநிலையாளர். அந்தப் பணியைச் சிறப்பாக செய்து, நன்மதிப்பைப் பெற்றவராக பி.எச்..பாண்டியன் இருந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், கழகத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், இரா.முத்தரசன், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக செயல்பட்ட பி.எச்..பாண்டியன் சட்ட அறிவால் அரசியல் தளத்தில் பேசப்பட்டவர். அவரது மறைவுக்கும், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அதிமுகவினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என கூறி உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி உள்ளதாவது:-
தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் பி.எச்..பாண்டியனின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். சட்டப்பேரவையில் சபாநாயகரின் அதிகாரம் எப்படிப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டவர் என்ற பெருமை அவருக்கு உண்டு என கூறி உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக, சபாநாயகராக, சட்டப்பேரவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக தமிழக மக்களின் நலன் காக்க சிறப்பாகச் செயல்பட்டவர். குறிப்பாக 3 முறை சேரன்மகாதேவி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுதியின் வளர்ச்சிக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுத்த பெருமைக்குரியவர். தான் சார்ந்திருந்த கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடனும் மூப்பனாருடனும் நம்பிக்கைக்கு உரியவராகச் செயல்பட்டவர் என கூறி உள்ளார்.
காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்
பி.எச்.பாண்டியன் துணை சபாநாயகராகவும், சபாநாயகராகவும் சட்டப்பேரவையைச் சிறப்பாக வழிநடத்திய பெருமைக்குரியவர். அவர் சபாநாயகராக இருந்த சமயத்தில், நான் அமைச்சராக இருந்து அவரோடு நெருக்கமாக பல ஆண்டுகள் பழகக்கூடிய நல் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். பழகுவதற்கு இனிமையானவர். நல்ல பண்பாளர். பலமுறை மக்கள் அன்பால் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறி உள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளதாவது:-
பி.எச். பாண்டியன் 43 ஆண்டுகள் பொதுவாழ்வில் பங்கெடுத்து ஈடு இணையற்ற மக்கள் சேவை செய்துள்ளார். அவரது மறைவு அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story