உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாளை அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம் - மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாளை அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களின் நம்பிக்கைக்குரிய இயக்கம் திமுக தான் என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாளை அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஜனநாயகத்தின் வேர்கள் காய்ந்துவிடக் கூடாது என்பதனால், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துங்கள், முறையாக நடத்துங்கள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தியது. அதனை உறுதிப்படுத்த சட்டரீதியான நடவடிக்கையாக நீதிமன்றங்களை நாடியது.
ஆளும் அடிமை அ.தி.மு.க.வோ, தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது தள்ளிப் போடும் முயற்சியிலேயே கவனமாக இருந்து, தி.மு.க. தொடர்ந்த வழக்குகளைக் காரணம் காட்டி கடைசிவரை தப்பித்துக் கொள்ளலாம் என கணக்குப் போட்டது. உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் அரசின் தலையில் ஓங்கிக் குட்டிய பிறகே, அதுவும் பகுதியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அ.தி.மு.க அரசும் அதன்கீழ் செயல்படும் மாநிலத் தேர்தல் ஆணையமும் முன்வந்தன.
ஆளுங்கட்சியும் மாநிலத் தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கைகோர்த்துக் கொண்டு தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக மும்முனைத் தாக்குதல் நடத்திய நிலையிலும், தி.மு.கவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் கிடைத்துள்ள இந்த வெற்றியின் அளவு மகத்தானது. இன்னும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி பெற வேண்டிய வெற்றியினை ஆளுந்தரப்பு தன் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும் தட்டிப்பறித்துள்ளது. யார் பெற்ற குழந்தைக்கோ, தான் பெயர் வைப்பதுபோல நாம் பெற்ற வெற்றிகள் பலவற்றைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல், தங்களுடையதாகக் காட்டிக் கொண்டுள்ளது அவமானமிகு அ.தி.மு.க.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகார போதையில், வெற்றி பெற்றுவிடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருந்த ஆளுந்தரப்புக்கு, வாக்காளப் பெருமக்கள் தமது திடமான தீர்ப்பின் மூலம், சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.
உள்ளாட்சியில் இன்று மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, நாளை தமிழகத்தில் அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம். மக்கள் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ள ஆளுந்தரப்பு மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி தேர்தல்களை நடத்துவதில் என்னென்ன தகிடுதத்தங்களை நடத்தப்போகிறது, எப்படியெல்லாம் தாமதப்படுத்தப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எத்தனை மோசடிகள் செய்தாலும், மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.க. வெற்றியைத் தடுத்திட முடியாது என்பதை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திவிட்டன.
இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட-ஒன்றிய நிர்வாகிகள், அவர்களுக்குத் துணையாக இருந்த கழக அமைப்புகளின் நிர்வாகிகள், அன்பு உடன்பிறப்புகளான கழகத்தின் தொண்டர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
தோல்வி கண்டால் துவள்வதுமில்லை, வெற்றி கண்டால் வெறிகொள்வதுமில்லை என்பது தான் கலைஞர் நமக்கு கற்றுக் கொடுத்துள்ள அடிப்படை அரசியல் இலக்கணம். அந்த வகையில், இந்த வெற்றி நாம் மேலும் அதிக அளவில் ஆர்வத்துடன் மக்கள் தொண்டாற்றவும், கட்சிப் பணியாற்றவும் பயன்பட வேண்டுமே தவிர, ஆரவாரங்களுக்கும் கோலாகலங்களுக்கும் உரியதல்ல. ஆளுங்கட்சியின் அத்துமீறல்களைக் கடந்து வெற்றி பெற்ற இடங்களைப் போலவே, நம்முடைய அலட்சியப் போக்குகளாலும், ஒத்துழைப்பின்மையாலும், கவனச் சிதறல்களாலும் வெற்றி வாய்ப்பை இழந்த இடங்களும் உள்ளன. அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பெரும்பணியும் நமக்கு இருக்கிறது. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துப் பெறுகிறோம் என அறிவாலயம் நோக்கி உடனடியாகப் படையெடுப்பதையும் தவிர்க்க வேண்டுகிறேன். ஏனெனில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் என்பது இன்னும் நிறைவடையவில்லை.
ஜனவரி 11-ம் நாள் மாவட்ட கவுன்சில் தலைவர்-ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாக்களித்து தமக்கான தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டிய தேர்தல் இது.
நேரடித் தேர்தலிலேயே பல மோசடிகளைச் செய்த அ.தி.மு.க., மறைமுகத் தேர்தலில் திரைமறைவுக் காரியங்கள் செய்ய, எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய அதிகாரபலத்தைக் கொண்டுள்ளது. அதனை முன்கூட்டியே உணர்ந்து முறியடித்து, கழகத்திற்கு மக்கள் அளித்துள்ள வெற்றியை, மாவட்ட கவுன்சில்-ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலிலும் உறுதி செய்திட வேண்டியது கழக உறுப்பினர்களின் பொறுப்பாகும்.
பொதுக்குழு கூட்டத்தில் நான் எடுத்துக்காட்டியதைப் போல, “வெற்றி சாதாரணமாகக் கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள்” என்பதை மனதில் கொண்டு, எந்தக் கட்டத்திலும் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், சூதுமதியாளர்களை வீழ்த்தி, மக்கள் தீர்ப்பை மாண்புறச் செய்வோம். அடுத்தடுத்த களங்களுக்கு இப்போதிருந்தே ஆயத்தமாவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story