உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு தமிழகத்தில் நாளை அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம் மு.க.ஸ்டாலின் அறிக்கை
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, நாளை தமிழகத்தில் அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. கூட்டணி வெற்றி
மக்களின் நம்பிக்கைக்குரிய பேரியக்கம் எந்நாளும் தி.மு.க.வே என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள். தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. எஞ்சிய 13 மாவட்டங்கள் பலவற்றிலும் தி.மு.க கூட்டணியின் வெற்றி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
அதுபோலவே, தேர்தல் நடைபெற்ற 314 ஒன்றியங்களில் உள்ள 5,090 வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் தி.மு.க. கூட்டணி 2,356 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் காரணமாக, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளிலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
மும்முனை தாக்குதல்
ஆளுங்கட்சியும், மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கைகோர்த்து கொண்டு தேர்தல் விதிகளுக்கு புறம்பாக மும்முனை தாக்குதல் நடத்திய நிலையிலும், தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடைத்துள்ள இந்த வெற்றியின் அளவு மகத்தானது. இன்னும் அதிகமான இடங்களில் தி.மு.க. கூட்டணி பெற வேண்டிய வெற்றியை ஆளுந்தரப்பு தன் அதிகார பலத்தாலும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும் தட்டிப்பறித்துள்ளது.
சூறாவளி - புயல் காற்று - சுனாமி எல்லாவற்றையும் மொத்தமாக எதிர்கொண்டு, ஆளுந்தரப்பை வீழ்த்தி, அத்துமீறல்களை தகர்த்து தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை வென்றுள்ளது. அறிவிக்கப்பட்ட முடிவுகளுடன், அநீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளிலும் நீதிமன்றத்தின் வாயிலாக நியாயம் கிடைக்கும் என்றால், சேலம், கரூர் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.
மக்களை ஏமாற்ற முடியாது
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதிகார போதையில், வெற்றி பெற்றுவிடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருந்த ஆளுந்தரப்புக்கு, வாக்காள பெருமக்கள் தமது திடமான தீர்ப்பின் மூலம், சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.
உள்ளாட்சியில் இன்று மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, நாளை தமிழகத்தில் அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம். மக்கள் தீர்ப்பினால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆளுந்தரப்பு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களை நடத்துவதில் என்னென்ன தகிடுதத்தங்களை நடத்தப்போகிறது, எப்படியெல்லாம் தாமதப்படுத்தப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எத்தனை மோசடிகள் செய்தாலும், மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.க.வின் வெற்றியை தடுத்திட முடியாது என்பதை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திவிட்டன.
அரசியல் இலக்கணம்
இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட - ஒன்றிய நிர்வாகிகள், அவர்களுக்கு துணையாக இருந்த தி.மு.க. அமைப்புகளின் நிர்வாகிகள், தலைவர் கருணாநிதியின் அன்பு தொண்டர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
தோல்வி கண்டால் துவள்வதுமில்லை, வெற்றி கண்டால் வெறிகொள்வதுமில்லை என்பதுதான் தலைவர் கருணாநிதி நமக்கு கற்றுக்கொடுத்துள்ள அடிப்படை அரசியல் இலக்கணம். அந்த வகையில், இந்த வெற்றி நாம் மேலும் அதிக அளவில் ஆர்வத்துடன் மக்கள் தொண்டாற்றவும், கட்சி பணியாற்றவும் பயன்பட வேண்டுமே தவிர, ஆரவாரங்களுக்கும், கோலாகலங்களுக்கும் உரியதல்ல. ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை கடந்து வெற்றி பெற்ற இடங்களை போலவே, நம்முடைய அலட்சிய போக்குகளாலும், ஒத்துழைப்பின்மையாலும், கவனச் சிதறல்களாலும் வெற்றி வாய்ப்பை இழந்த இடங்களும் உள்ளன. அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பெரும்பணியும் நமக்கு இருக்கிறது. வெற்றி பெற்றதற்கு வாழ்த்து பெறுகிறோம் என அறிவாலயம் நோக்கி உடனடியாக படையெடுப்பதையும் தவிர்க்க வேண்டுகிறேன். ஏனெனில், ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் என்பது இன்னும் நிறைவடையவில்லை.
தி.மு.க. உறுப்பினர்களின் பொறுப்பு
வருகிற 11-ந் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாக்களித்து தமக்கான தலைவர்களை தேர்வு செய்ய வேண்டிய தேர்தல் இது. நேரடி தேர்தலிலேயே பல மோசடிகளை செய்த அ.தி.மு.க., மறைமுக தேர்தலில் திரைமறைவு காரியங்கள் செய்ய, எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய அதிகாரபலத்தை கொண்டுள்ளது. அதனை முன்கூட்டியே உணர்ந்து முறியடித்து, தி.மு.க.வுக்கு மக்கள் அளித்துள்ள வெற்றியை, மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் தேர்தலிலும் உறுதி செய்திட வேண்டியது தி.மு.க. உறுப்பினர்களின் பொறுப்பாகும்.
பொதுக்குழு கூட்டத்தில் நான் எடுத்துக்காட்டியதை போல, “வெற்றி சாதாரணமாக கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள்” என்பதை மனதில் கொண்டு, எந்த கட்டத்திலும் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், சூதுமதியாளர்களை வீழ்த்தி, மக்கள் தீர்ப்பை மாண்புற செய்வோம். அடுத்தடுத்த களங்களுக்கு இப்போதிருந்தே ஆயத்தமாவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story