தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் மாநில தேர்தல் ஆணையர் தகவல்


தமிழகத்தில்   மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல்   மாநில தேர்தல் ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2020 5:15 AM IST (Updated: 5 Jan 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

‘தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று பகல் நிறைவடைந்தது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆணைய அலுவலத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு நேரடியாக தேர்தல் நடந்தது. இதில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியிடங்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியிடங்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் அடங்கும்.

18 ஆயிரத்து 137 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 410 ஊராட்சி தலைவர்கள், 23 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் கட்டமாக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்டமாக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 49 ஆயிரத்து 688 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 27-ந் தேதி நடந்த வாக்குப்பதிவில் 77.10 சதவீதமும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.

77.46 சதவீதம் வாக்குப்பதிவு

முதல் கட்ட தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டுகளின் சின்னங்கள் குறைபாடுகள் இருந்ததால் 30-ந் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலின் போது மறுவாக்குப்பதிவு நடந்தது. இதில் 72.70 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 2-ம் கட்ட தேர்தலில் இதுபோன்ற நிகழ்வால் 9 வாக்குச்சாவடிகளில் கடந்த 1-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது. இதில் 59.42 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இரண்டு கட்ட வாக்குப்பதிவு மற்றும் மறுவாக்குப்பதிவுகளில் மொத்தமாக 77.46 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்கு எண்ணும் மையங்களில் 30 ஆயிரத்து 354 போலீசார் மூலம் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அனைத்து மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் 1,890 நுண்பார்வையாளர்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் பணியை கண்காணித்தனர்.

25 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் இறந்ததால், அங்குள்ள வார்டு ஒன்றுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து வார்டு, செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வார்டு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றில் தலா ஒரு வார்டு, இதுதவிர 6 பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்கள் மற்றும் 15 வார்டு உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

அதாவது மாநிலம் முழுவதும் 25 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், கடந்த மாதம் 23-ந் தேதி வெளியிடப்பட்ட துணை வாக்காளர்கள் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டதால் 25 பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணும் பணி நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தலைமை தேர்தல் அதிகாரியிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டதும் விரைவில் இங்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

புகார்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் கே.பெரியபட்டி கிராம ஊராட்சி 2-வது வார்டு, திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் செருகுடி கிராம ஊராட்சி 1-வது வார்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் சென்னாகரம் கிராம ஊராட்சி 1-வது வார்டு ஆகியவற்றில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இறந்ததால் அந்த வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 1-ந் தேதியில் இருந்து தற்போது வரை 712 புகார் மனுக்கள் வந்துள்ளன. இதுதவிர தொலைபேசி மூலம் 1,082 புகார்கள் பெறப்பட்டு, ஆணையத்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, புகாரில் தெரிவிக்கப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.

வாக்கு எண்ணும் பணியை அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் மேற்கொண்டனர். அரசியல் கட்சியினர் பல்வேறு விளக்கங்கள், சந்தேகங்களை எழுப்பினர். அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் உரிய பதில்கள் அளிக்கப்பட்டன.

நாளை பதவி ஏற்பு

தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்ததை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன.

இதற்கு முன்பு நடந்த தேர்தல்களை விட இந்த தேர்தல் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடந்து முடிந்து உள்ளது. வெற்றி பெற்றவர்கள் 6-ந் தேதி (நாளை) காலை 10 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்கின்றனர்.

வாக்கு எண்ணும் நடவடிக்கையில் அதிகாரிகளால் குளறுபடிகள் ஏற்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் வீதிமீறல் புகார் வந்தால், கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி தேர்தல்

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற நகர்ப்புற ஊராட்சிகளுக்கான தேர்தல் தொடர்பான முதல் கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன. எனவே அவற்றுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story