பி.எச்.பாண்டியன் மரணம், அ.தி.மு.க.வுக்கு பேரிழப்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி

பி.எச்.பாண்டியனின் மரணம், அ.தி.மு.க.வுக்கு பேரிழப்பு என்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடலுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. மூத்த தலைவர் பி.எச்.பாண்டியன் கட்சிக்காக பாடுபட்டு உழைத்தவர். எம்.ஜி.ஆர். இருந்த காலத்திலேயே தன்னுடைய அரசியல் பணிகளை தொடங்கி, ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்திலும் கட்சிக்காக பணியாற்றியவர். சிறந்த வக்கீல், திறமையாக நீதிமன்றத்தில் வழக்காடக்கூடிய திறமை பெற்றவர்.
கட்சியில் சட்ட ஆலோசகராக பொறுப்பேற்று, திறம்பட பணியாற்றியவர். கட்சியின் அமைப்பு செயலாளராகவும் பணியாற்றியவர். எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக இருந்தவர். நாடாளுமன்ற குழு தலைவராக இருந்து சிறந்த முறையில் பணியாற்றினார். தமிழக சபாநாயகராக இருந்து, தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர் பி.எச்.பாண்டியன்.
பேரிழப்பு
பி.எச்.பாண்டியனின் மரணம் அ.தி.மு.க.வுக்கு பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், குறிப்பாக முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான மனோஜ் பாண்டியனுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவருடைய உற்றார், உறவினர் மற்றும் அவரை பிரிந்து வாடும் அனைவருக்கும் அ.தி.மு.க. சார்பாக ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story