காண்டிராக்டரிடம் துப்பாக்கிமுனையில் 170 பவுன் நகை கொள்ளை வங்கியில் பணத்தை எடுக்க குடும்பத்தினரை காரில் அழைத்துச்சென்ற துணிகர கும்பல்
மதுரையில் காண்டிராக்டரை துப்பாக்கி முனையில் மிரட்டி 170 பவுன் கொள்ளையடிக் கப்பட்டது. வங்கியில் பணத்தை எடுக்க குடும்பத்தினரை காரில் அழைத்துச்சென்ற துணிகர கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மதுரை,
மதுரையில் பொதுப்பணித்துறை காண்டிராக்டராக இருப்பவர் குணசேகரன் (வயது 59). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பழங்காநத்தம் பகுதியிலும், 2-வது மனைவி கூடல்புதூர் அப்பாத்துரை நகர் முதல் தெருவிலும் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று குணசேகரன் 2-வது மனைவி வீட்டில் இருந்தார். அப்போது காலையில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே அவர் ஜன்னல் வழியாக யார்? என்று பார்த்தார். அப்போது வீட்டு வாசலில் பெண் உள்பட 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் குணசேகரன் கேட்ட போது, அவர்கள் தாங்கள் போலீஸ் என்று கூறியுள்ளனர். மேலும் ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வந்ததாகவும், எனவே கதவை திறக்குமாறும் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து கதவை திறந்த போது அவர்கள் அனைவரும் வீட்டின் உள்ளே வந்தனர்.
துப்பாக்கியை காட்டி மிரட்டல்
பின்னர் குணசேகரனிடம், உங்கள் வீட்டில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாகவும், தவறான முறையில் சொத்துக்கள் சேர்த்து இருப்பதாகவும் எங்களுக்கு புகார் வந்துள்ளது. அது குறித்து வீட்டில் சோதனையிட உள்ளோம் என்றனர். உடனே அவர் நான் அரசு காண்டிராக்டர், வருமானவரி கட்டி வருகிறேன் என்று கூறி இருக்கிறார். அவர்களில் 3 பேர், திடீரென துப்பாக்கியை எடுத்து காட்டி குணசேரன், அவரது மனைவி, மகனை மிரட்டி பீரோ மற்றும் நகை, ஆவணங்கள் வைத்துள்ள பெட்டியின் சாவியை தருமாறு கேட்டனர்.
உடனே குணசேகரனின் மனைவி பயந்து போய், அவர்களிடம் அனைத்து சாவியையும் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர்கள் பீரோவை திறந்து உள்ளே இருந்த 170 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டனர்.
தப்பிச் சென்றனர்
மேலும் தங்களுக்கு ரூ.30 லட்சம் ரூபாய் உடனே தரவேண்டும் என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். அதற்கு குணசேகரன் குடும்பத்தினர் வங்கியில் ரூ.6 லட்சம் இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அந்த பணத்தையும் எடுத்து தங்களிடம் கொடுக்குமாறு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டினர். அதை தொடர்ந்து குணசேகரன் குடும்பத்தினரை காரில் ஏற்றிக்கொண்டு ஒத்தக்கடையில் உள்ள வங்கிக்கு சென்றனர். அங்கு சென்று பார்த்த போது அன்றைய தினம் தேர்தலையொட்டி வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்து குணசேகரன் குடும்பத்தினரை காரில் இருந்து இறக்கிவிட்ட அந்த கும்பல், நாங்கள் கேட்ட பணத்தை முழுவதும் கொடுக்க வேண்டும். இது குறித்து வெளியில் எதுவும் சொல்லக்கூடாது, அப்படி கூறினால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மீண்டும் மிரட்டிவிட்டு, தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து குணசேகரன் ஆன்லைனில் மூலம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், போலீஸ் போல் நடித்து துப்பாக்கி முனையில் மிரட்டி, தன்னிடம் 170 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பின்னணி என்ன?
காண்டிராக்டர் குணசேகரனின் அண்ணன் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சோலை முத்தையா ஆவார். தொழில் போட்டி காரணமாக யாராவது கூலிப்படையை ஏவி இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாமா? என்ற கோணத்திலும் அல்லது அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story