ஊராட்சி தேர்தல் : வலைவீசும் அதிமுக-திமுக ; தலைதெறிக்க ஓடும் சுயேட்சை கவுன்சிலர்கள்


ஊராட்சி தேர்தல் : வலைவீசும் அதிமுக-திமுக ; தலைதெறிக்க ஓடும் சுயேட்சை கவுன்சிலர்கள்
x
தினத்தந்தி 6 Jan 2020 3:11 PM IST (Updated: 6 Jan 2020 3:34 PM IST)
t-max-icont-min-icon

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர் பதவியேற்றவுடன் சுவர் ஏறி குதித்து ஓட்டம்பிடித்தார்.

மதுரை

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5 ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 243 மாவட்ட கவுன்சிலர்  இடங்களையும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 214  இடங்களையும் கைப்பற்றினர். இதேபோல், 2 ஆயிரத்து 99 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக கூட்டணியும், ஆயிரத்து 781 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றின.

இந்த நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை ஆணையர்கள் முன்னிலையில் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர். சில இடங்களில் மோதல், தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேறின. 

பல ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடங்களை கைப்பற்ற சுயேட்சைகளை திமுக மற்றும் அதிமுக வளைத்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, சுயேட்சையாக போட்டியிட்டு அரவிந்த் என்ற பொறியியல் பட்டதாரி  வெற்றி பெற்றார்.

24 வயது பொறியியல் பட்டதாரியான அரவிந்த், 1300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். நடுமுதலைக்குளத்தை சேர்ந்த அரவிந்த், தாய் - தந்தையை இழந்த நிலையில், தனது பாட்டி ஆதரவுடன் பொறியியல் பட்டம் பெற்றதுடன் வழக்கறிஞர் படிப்பும் முடித்துள்ளார்.

இந்த நிலையில், வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றுவரும் நிலையில், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும்  பதவியேற்றுக்கொண்டனர்.

8-வது வார்டு உறுப்பினராக அரவிந்த் பதவியேற்றவுடன், சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பல ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடங்களை கைப்பற்ற சுயேட்சைகளை திமுக மற்றும் அதிமுக வளைத்து வரும் நிலையில், அரவிந்த் அதற்காக ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

செல்லம்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகள் இருக்கும் நிலையில், 9 வார்டில் அதிமுகவும், 6 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் சுயேட்சையான அரவிந்தும் வெற்றி பெற்றனர். ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகள் அதிமுக வசமே செல்ல இருக்கும் நிலையில், சுயேட்சையின் ஆதரவு எந்த வகையிலும் இரு கட்சிக்கும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மொத்தம் 16 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில், அதிமுக 8, திமுக 6, தேமுதிக 1, சுயேட்சை 1 என மொத்தம் 16 பேர் உள்ளனர்.

இந்நிலையில், திமுகவைச் சேர்ந்தவர்கள் அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரை தங்கள் பக்கம் அழைத்துச்செல்ல முற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த அதிமுகவினர் அந்த கவுன்சிலரை மீட்டு தனிப்பேருந்தில் சொகுசு விடுதிக்கு அழைத்து சென்றனர். அதேபோல் அவருடன் அதிமுக மற்றும் தேமுதிக கவுன்சிலர்கள் என மொத்தம் 9 பேர் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

புதுக்கோட்டை திருவரங்குளம் யூனியனின்  ஒன்றிய குழு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுகவின் இருதரப்பினர் இடையே மோதல்ஏற்பட்டது. திமுகவைச் சேர்ந்த ஞான இளங்கோவன் கே.பி.கே தங்கமணி தரப்பினர் மோதிக்கொண்டனர்.

மதுரை உசிலம்பட்டி அருகே அமமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் அலெக்ஸ்பாண்டி, மலேசியா பாண்டி ஆகிய இருவரையும் கடத்த நடந்த முயற்சியால் போலீசார் தடியடி நடத்தினர்.

Next Story