நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் -சென்னையில் தொழிற்சங்க தலைவர்கள் கைது
சென்னையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்- காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல்வேறு தொழிற்சங்கத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி
நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தால் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. அந்த வகையில் தமிழகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்-ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின.
சென்னையில் எப்போதும் போலவே போக்குவரத்து இருந்தது. பெரும்பாலான மாநகர பஸ்கள் ஓடின. ஆட்டோக்களும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டது.
போக்குவரத்து பணிமனைகள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிரச்சினைக்குரிய இடங்கள் என்று கருதப்பட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோயம்பேடு பஸ் நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் நடைபெற்றாலும் இன்று வழக்கம்போல் பஸ்- ஆட்டோக்கள் ஓடியது.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேருந்தில் ஏற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே செல்கின்றன.
சரக்கு லாரிகள் தமிழக- கேரள எல்லையான வாளையார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பின்னரே போக்குவரத்து தொடங்கும். கோவை, வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இன்று மறியல் போராட்டமும் நடைபெற்றது.
திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை. நீலகிரி மாவட்டத்திலும் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வாகனங்கள் ஓடவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவனந்தபுரம் ரயில் நிலைய சந்திப்பு தம்பானூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளும் சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சில ஆட்டோக்களும் தனியார் வாகனங்களும் மட்டுமே இயங்கி வருகின்றன. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் எவ்வித இடையூறுமின்றி சென்று கொண்டிருக்கின்றன.
திருவனந்தபுரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளை காவல் துறை வாகனத்தில் அழைத்து செல்லும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
முழு அடைப்பு போராட்டத்தால் கர்நாடகாவில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. குடகு மாவட்டத்தில் மட்டும் அரசு பேருந்து மீது கல் எறிந்ததைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கலபுரக்கி பேருந்து நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story