மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை? மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
மருந்து நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்ற டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஒரு மருந்து நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் 5 கோடி நோயாளிகளுக்கு 10 லட்சம் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நவீன மருத்துவத்தில் இந்தியா சிறந்து விளங்குவதால் வெளிநாட்டினரும் இந்தியாவுக்கு குறிப்பாக சென்னைக்கு மருத்துவ சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால், தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் இங்குள்ள ஏழை, எளிய மக்களுக்கு கிடைப்பதில்லை.
2017-ம் ஆண்டு இந்திய மருந்து நிறுவனங்களின் வர்த்தகம் ரூ.1,16,389 கோடியாக இருந்தது, 2018-ம் ஆண்டு ரூ.1,29,015 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த மருந்து நிறுவனங்களின் தேவையில்லாத மருந்துகளை அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்காக, டாக்டர்களுக்கு தங்க நகை, பணம், கிரெடிட் கார்டு, இன்பச்சுற்றுலா என பல வழிகளில் லஞ்சம் வழங்குவதாக ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் டாக்டர்கள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகள் அதிக விலை கொடுத்து வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எக்ஸ்ரே, இ.சி.ஜி. என ஆய்வுக்கூடங்கள் மூலமாகவும் டாக்டர்களுக்கு அதிகளவில் கமிஷன் செல்கிறது.
டாக்டர்கள் எந்த ஒரு அன்பளிப்பும், லஞ்சமும் மருந்து நிறுவனங்களிடம் இருந்து பெறக்கூடாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கைக்கு எந்த பலனும் இல்லை. நடத்தைவிதிகளை டாக்டர்கள் தொடர்ந்து மீறி வருகின்றனர்.
திரைமறைவில் நடந்துவரும் இந்த மருத்துவ மாபியாக்களினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை பொறுத்தமட்டில் மருந்து விற்பனைக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொகையை தங்களின் ஈட்டிய வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள வேண்டும் என்ற மனுதாரர் நிறுவனத்தின் கோரிக்கை அதிர்ச்சியாக உள்ளது. மருந்து நிறுவனங்களிடம் டாக்டர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்நிறுவனங்களின் மருந்துகளை சிபாரிசு செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
எனவே கடந்த 5 ஆண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மருந்துகளை அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்க தங்க நகை, கிரெடிட் கார்டு, பணம் என பல வழிகளில் லஞ்சம் பெற்ற டாக்டர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
மனுதாரர் நிறுவனம் தங்களின் மருந்து விற்பனையை உயர்த்துவதற்காக ரூ.42 லட்சத்து 81 ஆயிரத்து 986-ஐ செலவு செய்ததாக கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. நடத்தைவிதிகளை மீறி மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற டாக்டர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
மருத்துவ விதிகளை மீறி லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மருந்துகளின் விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story