எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் -முதலமைச்சர் பழனிசாமி உறுதி


எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் -முதலமைச்சர் பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 9 Jan 2020 12:49 PM IST (Updated: 9 Jan 2020 3:33 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

சென்னை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை- மார்த்தாண்டம் சந்தைரோட்டில் மணல் கடத்தலை தடுப்பதற்காக தனி சோதனை சாவடி உள்ளது. இந்த  சோதனை சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி  தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணி  அமர்த்தப்பட்டதால், ஒரு போலீஸ்காரர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு இந்த சோதனை சாவடியில் களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 55) என்பவர் பணியில் இருந்துள்ளார். இரவு சுமார் 9.40 மணி அளவில் சோதனை சாவடி அருகே ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், சோதனைசாவடிக்கு சென்று அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர் திடீரென அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத வில்சனின் மார்பு, கழுத்து, வலது தொடை ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள், தாங்கள் வந்த காரிலேயே தப்பி விட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சோதனைசாவடி நோக்கி ஓடி வந்தனர். அங்கு குற்றுயிரும், குலையிருமாக உயிருக்கு போராடிய வில்சனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வில்சனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் வில்சன் கொலை தொடர்புடைய 2 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.

அவர்கள் கன்னியாகுமரியைச் சேர்ந்த அப்துல் சமீம், தெளபீக் ஆகியோர் ஆவர். அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்றவர்களை உடனே கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் எஸ்.ஐ வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story