சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ.75 லட்சம் நிதி முதல்-அமைச்சர் அறிவிப்பு
‘சென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்படும்’, என்று கண்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை,
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு, ‘பபாசி’ புரவலரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் ரிப்பன் வெட்டி கண்காட்சியை அவர் தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வி.சரோஜா, கே.பி.அன்பழகன், க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், பாடநூல்-கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கண்காட்சிக்கு அரங்கத்துக்கு வெளியே ‘கீழடி-ஈரடி தமிழ் தொன்மங்கள்’ எனும் தலைப்பில் அமைக்கப்பட்ட கீழடி அகழாய்வு தொடர்பான சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. தொல்லியல் துறை கமிஷனர் த.உதயசந்திரன் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இந்த அரங்கில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய், நீர் மேலாண்மை திட்டம், கருப்பு சிவப்பு குவளைகள், உறை கிணறு உள்ளிட்ட பொருட்களின் மாதிரி வைக்கப்பட்டிருந்தது. கீழடி அகழாய்வு பணிகள் குறித்த ஒளிப்பட காட்சி கூடமும் அமைக்கப்பட்டிருந்தது.
அதேபோல ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன பட்நாயக் வடிவமைத்த திருவள்ளுவர் மணற்சிற்பமும் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஆண்டுதோறும், பொங்கல் திருநாளையொட்டி, மக்களின் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும் சுற்றுலாப் பொருட்காட்சியும், அறிவுக்கு விருந்தளிக்கும் புத்தகக் காட்சியும் சென்னையில் ஒருசேர நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். புத்தகங்களே நம்மை ஒருபோதும் ஏமாற்றாத சிறந்த நண்பன். மனிதனுக்கும், இந்த உலகத்துக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்துவது புத்தகங்களே. புத்தகம் என்பது ஒரு அலங்காரப் பொருள் அல்ல. அது நம்மை நேர்மையான வழியில் வாழ்வதற்கு வழி நடத்துகின்ற தோழன். புத்தகங்கள் இல்லையெனில், மனிதகுலம் இத்தகைய வளர்ச்சியை கண்டிருக்க முடியாது.
இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற அரசின் நிதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் இருந்து இந்த புத்தகக் கண்காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
புத்தக கண்காட்சி தொடக்க விழாவில், சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பு செம்மல் க.கணபதி விருது அரு.லெட்சுமணனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பக செம்மல் ச.மெய்யப்பன் விருது ஆர்.அருணாசலத்துக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது பொற்கோவுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது என்.எஸ்.சிதம்பரத்துக்கும், பபாசியின் சிறந்த பதிப்பாளருக்கான விருது ராம லெட்சுமணனுக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது செ.சுகுமாரனுக்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது ரமணிசந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
விழாவில் ‘பபாசி’ தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்று பேசினார். செயலாளர் எஸ்.கே.முருகன் நன்றி கூறினார். 800 அரங்குகளுடன் நேற்று தொடங்கிய புத்தக கண்காட்சி வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார்.
Related Tags :
Next Story