பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 10 நாள் போலீஸ் காவல் -எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 பேரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பெங்களூரில் கடந்த 7 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி முகமது அனீப்கான் (வயது 29), இம்ரான்கான் (32), முகமது சயீத் (24) ஆகிய மூன்று பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்து தலைமறைவான மூன்று குற்றவாளிகளுடன் இவர்கள் மூவரும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
தலைமறைவான மூன்று பேரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்களுக்கு உதவி செய்து வந்த மூவர், பெங்களூருவில் வைத்து க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் 3 பேரும் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் தோட்டாக்களுடன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவர்கள் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேருடனும் சேர்ந்து தமிழகத்தில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 3 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு இன்று எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Related Tags :
Next Story