சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 9:45 PM GMT (Updated: 2020-01-11T00:17:45+05:30)

சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

ஈரோடு, 

கோபி அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தருமன். இவருடைய மகன் ரமேஷ்குமார் (வயது 31). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு பழக்கமானார். அந்த சிறுமியின் தாயார் மைசூரில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தந்தை கூலித்தொழிலாளி. அவர் வெவ்வேறு இடங்களுக்கு சென்று அந்தந்தபகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வருவது வழக்கம். சிறுமியின் அண்ணன், கூலித்தொழிலுக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வருவார். எனவே பெரும்பாலும் வீட்டில் சிறுமி தனியாக இருந்து வந்தார்.

இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட ரமேஷ்குமார், கடந்த 14-10-2016 அன்று நள்ளிரவில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த விவரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும், உன் அண்ணனை கொன்றுவிட்டு உன்னையும் நிர்வாணப்படுத்தி கொலை செய்து விடுவேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இதுபோன்று தொடர்ந்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். சில மாதங்கள் கழித்து சிறுமியின் தாயார் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோது சிறுமியின் வயிறு பெரிதாக இருந்தது. அதுபற்றி அவர் கேட்டபோது, என்னை ஏதேனும் கேட்டால் இறந்து விடுவேன் என்று கூறி அழுதார்.

இந்தநிலையில் கடந்த 7-10-2017 அன்று சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, சிறுமியின் தாயார் அதுகுறித்து கேட்டார். அப்போது ரமேஷ்குமார் தன்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டதை கூறினார்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, அவர் தனக்கு இதில் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டு தலைமறைவானார். அதைத்தொடர்ந்து இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரமேஷ்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ரமேஷ்குமார் தனது குற்றத்தை மறுத்தார். பின்னர் கோர்ட்டு அனுமதியுடன் நடந்த மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனையில் குழந்தையின் தந்தை ரமேஷ்குமார் என்பது உறுதியானது.

இந்த வழக்கை நீதிபதி மாலதி விசாரணை செய்து தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை மிரட்டி கர்ப்பிணியாக்கிய ரமேஷ்குமாருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தும் அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர். சுமதி ஆஜர் ஆனார்.

Next Story