ஜனநாயக வழியில் எதிர்ப்பை பதிவு செய்ய கவர்னர் உரையை புறக்கணித்தோம் மு.க.ஸ்டாலின் விளக்கம்


ஜனநாயக வழியில் எதிர்ப்பை பதிவு செய்ய கவர்னர் உரையை புறக்கணித்தோம் மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 11 Jan 2020 4:30 AM IST (Updated: 11 Jan 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஆளுங்கட்சியினர் தயாரித்து கொடுத்திருந்ததால் ஜனநாயக வழியில் எதிர்ப்பை பதிவுசெய்ய கவர்னர் உரையை புறக்கணித்தோம் என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. வெளிநடப்பு

கவர்னர் உரையுடன் தொடங் கிய இந்த ஆண்டுக் கான முதல் சட்டமன்றக் கூட்டம், ஏதோ சடங்குக்காக, ‘கூடினோம்.. கலைந்தோம்’ என்று முடிவடைந்திருக்கிறது. மாநில மக்களின் நலன்களைக் காக்கவும் உரிமைகளை மீட்கவும் ஆரோக் கியமான விவாதங் களை மேற்கொண்டு, அதற்கேற்ப சட்டங்களையும், திட்டங்களையும் வகுக்கவேண்டிய சட்டப்பேரவையை, ஆளுந்தரப்பினரின் பொழுதுபோக்குக்காக பயன்படுத்திடும் போக்கே தொடர்ந்து கொண்டிருக் கிறது.

ஜனவரி 6-ந்தேதி சட்டப்பேரவையில் கவர்னர் ஆற்றிய உரை என்பது, ஆட்சியாளர்களின் குரல் ஒலியே தவிர, அது இந்த ஆட்சியை பற்றிய கவர்னரின் மதிப்பீடல்ல. ஆட்சியாளர்களின் குரல் என்பது, தாங்கள் ஆளுகின்ற மாநிலத்தின் நலன் சார்ந்து இருந்திட வேண்டும். ஆனால், வெற்றுப் புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுகளையும் திணித்துக் கொண்ட காகிதக்கட்டாக கவர்னர் உரை இருந்த காரணத்தால்தான், அதனை புறக்கணித்து தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தோம்.

விருப்பு வெறுப்பு கிடையாது

கவர்னர் என்ற பதவியின் தன்மை குறித்து அண்ணாவின் காலம் தொட்டு, தி.மு.க.வுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், கவர்னராகப் பொறுப்பு வகிக்கின்ற யார் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ஒருபோதும் தி.மு.க.வுக்கு கிடையாது. அந்த பதவிக்குரிய மதிப்பையும் மாண்பையும் உணர்ந்தே செயல்பட்டு வருகிறது.

தற்போதைய கவர்னரிடமும் அதே மதிப்பினை கொண்டுள்ளது. கவர்னரும் அவரது உரையைத் தொடங்கியபோது, நான் எழுந்து பேச முற்பட்டதும், “மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு என்னுடைய வேண்டுகோள். நீங்கள் பேச்சுத் திறமைமிக்கவர். இப்போது நான் உரையாற்றத் தொடங்கியுள்ளேன். இது தொடர்பாக கவர்னர் உரை மீதான விவாதம் வரும்போது நீங்கள் பேச்சுத் திறனை வெளிப்படுத்துங்கள்“ எனக் குறிப்பிட்டுப் பேசியதை அனைவரும் கவனித்தார்கள்.

ஜனநாயகப்பூர்வ அணுகுமுறை

மக்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரம் தொடர்பான அத்தியாவசிய பிரச்சினைகள், மாநிலத்தின் நிதிநிலையை மோசமாக்கியுள்ள கடன்சுமை இவற்றை புறந்தள்ளிவிட்டு, கவர்னர் உரையினை ஆளுந்தரப்பு தயாரித்துக் கொடுத்திருந்ததால்தான், ஜனநாயக வழியில் நம் எதிர்ப்பை பதிவு செய்திடும் வகையில் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அது குறித்து, பேரவை வளாகத்திலேயே ஊடகத்தினரிடம் விளக்கமாக தெரிவித்தேன்.

வெளிநடப்பு என்பது எதிர்ப்பை காட்டுவதற்கான ஓர் அடையாளம். அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறை. அதைத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தி.மு.க. மேற்கொண்டது. எதிர்ப்பை பதிவு செய்த பிறகு மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்பதுதான் தி.மு.க.வின் மரபு. அந்த வகையில், கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்ற ஜனவரி 7-ந்தேதி பேரவையில், மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தி.மு.க.வின் சார்பில் கொடுத்த தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தி.மு.க.வும், கூட்டணி கட்சியினரும் வலியுறுத்தினோம். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற பேரவை உறுப்பினர்கள் சிலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தனர்.

காவல் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை

சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய ஜனவரி 9-ந் தேதியன்று, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இது என்று காவல்துறை சொல்கிறது. துப்பாக்கியால் சுடப்பட்டதுடன், அந்த காவல் அதிகாரி உடலில் கத்திக்குத்துகளும் பதிந்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. “காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை” என்பதில்தான் தமிழ்நாடு முதலிடம் என்பதையும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்வாரா?

அதனால்தான் கவர்னர் உரை என்பது மாநிலத்தின் உண்மை நிலைமையை எடுத்துச் சொல்லாமல், மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளை குறிப்பிடாமல், வெற்று புகழுரைகளால் நிறைந்திருக்கிறது என்பதைத் தொடக்க நாள்முதலே எடுத்துரைத்து தி.மு.க. வெளிநடப்புச் செய்தது. கூட்டத்தொடரின் இறுதிநாளில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை மனிதர்களான ஆளுந்தரப்பினரின் இத்தகைய வினோத போக்குகளுக்கு நடுவில், பேரவையின் கேள்வி நேரங்களில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து சிறப்பாக உரையாற்றினார்கள்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. தன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அது ஆளுங்கட்சியாக வேண்டும் என்கிற மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றிட, இன்றைய ஆட்சியாளர்களே ஒத்துழைப்பது போல அமைந்திருக்கிறது; கவர்னர் உரையும், அதன் மீதான ஆளுந்தரப்பின் உரைகளும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story