ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் தொடங்கியது: பல இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது


ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் தொடங்கியது: பல இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது
x
தினத்தந்தி 11 Jan 2020 5:46 AM GMT (Updated: 11 Jan 2020 5:46 AM GMT)

ஊரக உளளாட்சி மறைமுக தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. பல இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது

சென்னை

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 513 மாவட்ட கவுன்சிலர்கள், 5087 ஒன்றிய கவுன்சிலர்கள், 9616 ஊராட்சி மன்ற தலைவர்களும், 76 ஆயிரத்து 712 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடம், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடம்,9624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அதிமுக கூட்டணி 240 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 271 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 வார்டுகளில் அதிமுக கூட்டணி 2199 இடங்களிலும், திமுக கூட்டணி 2356 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தவரை அதி்முக, திமுக தலா 135 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் பெறுவது உறுதியாகி உள்ளது. இரண்டு ஒன்றியங்களில் அமமுகவுக்கு தலைவர், துணை தலைவர் பதவி கிடைக்க உள்ளது. மீதமுள்ள 42 ஊராட்சி ஒன்றியங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது.

27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது.  பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. 27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலை ரத்து  செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிடு உள்ளார்.  சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

* திமுக- அமமுக கட்சிகளில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இணைந்தனர். தேனி மாவட்டம் , பெரியகுளத்தில்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில், அவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

* கமுதி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற கடும்  போட்டி நிலவுகிறது.  அதிமுக திமுகவிற்கு தலா 7 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக, தேமுதிக தலா ஒரு உறுப்பினர்களும், சுயேட்சை 3 பேரும் உள்ளனர் .

* மதுரை மேலூரில் திமுக கவுன்சிலர்கள் உடன் வந்த அமமுக கவுன்சிலர்கள்!

* நாமக்கல்: பரமத்தியில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு உள்ளது. மறைமுகத் தேர்தலுக்கு திமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே வந்துள்ளதால் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

Next Story