டுவிட்டரில் பாஜக- திமுக இடையே மோதல்


டுவிட்டரில் பாஜக- திமுக இடையே மோதல்
x
தினத்தந்தி 11 Jan 2020 4:52 PM IST (Updated: 11 Jan 2020 4:52 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பாஜக- திமுக இடையே டுவிட்டரில் மோதல் ஏற்பட்டது.

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வில்சன் என்பவர் கடந்த 9 ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார். களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் காவல்துறை சோதனைச் சாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்ததில் காவலரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 2 பேரின் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. 2 பேரில் ஒருவனின் பெயர், அப்துல் ஷமீம் என்றும், இன்னொருவனின் பெயர் தவுபீக் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது.

இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, களியக்காவினையில் பணியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு ரூ. 1கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று, தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :-

'இதை விட கேவலம் வேறுண்டோ நடந்த படுகொலைக்கு சிறு கண்டனம் இல்லை, இரங்கலும் இல்லை, அவர் குடும்பத்துக்கு ஆறுதல் இல்லை, குற்றவாளிகளை கண்டிக்க மனமும் இல்லை. ஆனால் இதோ சாவிலும் அரசியல் செய்ய வந்து விட்டார் சர்வாதிகாரி பாசிச மு.க.ஸ்டாலின். யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற குழப்பம் தீரவில்லையோ என பதிவிடப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலடி தரும்விதமாக திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ''மதத்தின் பெயரால் கலவரங்களை உருவாக்கி - கொலைகள் செய்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் பாஜக அதன் அங்கமான தமிழக பாஜக இரங்கல் - ஆறுதல்' என்றெல்லாம் பேசுவது காலக்கொடுமை! 'பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்' ''எனப் பதிலடி கொடுத்துள்ளனர்.

Next Story