அறிக்கை வெளியிட்டது முடிந்துபோன விஷயம்: தி.மு.க.வுடன் நட்பு தொடருகிறது; கே.எஸ்.அழகிரி பேட்டி


அறிக்கை வெளியிட்டது முடிந்துபோன விஷயம்: தி.மு.க.வுடன் நட்பு தொடருகிறது; கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 8:17 PM GMT)

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தி.மு.க. வழங்காதது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என்று வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை முடிந்துபோன விஷயம் என்றும், தி.மு.க.வுடன் நட்பு தொடருகிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் மகளிர் அணி மற்றும் அகில இந்திய அன்னை சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சமத்துவ பொங்கல் விழாவுக்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, தேசிய செயலாளர் வக்கீல் சுதா, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சமத்துவ பொங்கல் விழாவையொட்டி சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் கே.எஸ்.அழகிரி மற்றும் மகளிர் அணியினர் மரக்கன்றுகளை நட்டனர்.

அதைத் தொடர்ந்து மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொங்கல் பண்டிகைக்கான நலத்திட்ட உதவிகளை கே.எஸ்.அழகிரி வழங்கினார். இதில், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் டாக்டர் விஷ்ணுபிரசாத், மாவட்ட தலைவர் கே.வீரபாண்டியன், ஆராய்ச்சித்துறை தலைவர் நாசே ராஜேஷ், பொன்.கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் பிரசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழாவை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தி.மு.க. வழங்கவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது வெளியிட்டு இருந்த அறிக்கை குறித்து நிருபர்கள் கே.எஸ்.அழகிரியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது:-

அறிக்கை வெளியிட்டது நேற்றோடு முடிந்துபோன விஷயம். இன்று அதில் புதிதாக ஒன்றும் இல்லை. தி.மு.க.வுடனான எங்கள் உறவு நன்றாகவே இருக்கிறது. எங்களுக்குள் எந்த கசப்பும் இல்லை. கட்சி சார்பில் ஒரு கருத்து சொல்லவேண்டி இருந்தது. அதனை சொல்லப்பட்டது அவ்வளவுதான்.

எப்போதும்போல் தி.மு.க.வுடனான நட்பு தொடருகிறது. நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகவில்லை. ஜனநாயகத்தில் யாரும், யாரையும் மிரட்ட முடியாது. கூட்டணி என்பது வெறும் ஓரிரு இடங்களுக்கான கூட்டணி அல்ல. இது ஒரு கொள்கை ரீதியான கூட்டணி. இந்தியாவில் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்கின்ற கொள்கைக்காக போடப்பட்ட கூட்டணி.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மற்றும் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி, அவர்களின் உருவப்படத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Next Story