10-ம் வகுப்பு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை மறைத்தால் என்ன? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


10-ம் வகுப்பு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை மறைத்தால் என்ன? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 8:32 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். குறித்து 10-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்தை ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைத்தால் என்ன? என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சென்னை செயலாளர் சந்திரசேகர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகியுள்ளன. ‘இந்து வகுப்புவாதம், முஸ்லிம் வகுப்புவாதம் மற்றும் இந்திய தேசியம்’ என்ற தலைப்பில் உள்ள பாடத்தில், ‘இந்து மகா சபா மற்றும் ராஷ்டிரிய சுவயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) ஆகியன முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன’ என்று எழுதப்பட்டுள்ளது.

அதாவது சுதந்திர போராட்ட காலத்தில் இந்த இரு அமைப்புகளும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், நாடு இரண்டாக பிரிய காரணமாகி விட்டது என்பது போல இந்த வரிகள் தோற்றம் உருவாக்குகிறது.

ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். பிற மதங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஆனால் சாதிகளால் பிரிந்து கிடந்த இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணிகளைதான் மேற்கொண்டது. மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். கடுமையாக எதிர்த்தது.

எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். எடுத்தது என்ற வரியை நீக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 18-ந் தேதி தமிழக அரசுக்கு புகார் மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு விசாரித்தார். அப்போது கல்வித்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் முனுசாமி, ‘நடப்பு கல்வியாண்டில் புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அடுத்த கல்வி ஆண்டு வழங்கப்படும் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய அந்த வரி நீக்கப்படும்’ என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘சர்ச்சைக்குரிய வரிக்கு மேல் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைத்தால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி சிறப்பு அரசு பிளடருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். 

Next Story