மாநில செய்திகள்

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல்: தி.மு.க.-12; பாட்டாளி மக்கள் கட்சி-1; 13 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி; ஒன்றியங்களில் அ.தி.மு.க-140; தி.மு.க-125 + "||" + District Panchayat President election: DMK-12; Proletariat party-1; AIADMK in 13 places Success

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல்: தி.மு.க.-12; பாட்டாளி மக்கள் கட்சி-1; 13 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி; ஒன்றியங்களில் அ.தி.மு.க-140; தி.மு.க-125

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல்: தி.மு.க.-12; பாட்டாளி மக்கள் கட்சி-1; 13 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி; ஒன்றியங்களில் அ.தி.மு.க-140; தி.மு.க-125
அ.தி.மு.க. 13 மாவட்ட பஞ்சாயத்துகளையும், தி.மு.க. 12 மாவட்ட பஞ்சாயத்துகளையும் கைப்பற்றின. சேலம் மாவட்ட பஞ்சாயத்து பா.ம.க. வசமானது. மேலும் அ.தி.மு.க.140 ஒன்றிய தலைவர் பதவிகளையும், தி.மு.க. 125 ஒன்றிய தலைவர் பதவிகளையும் பிடித்தன.
சென்னை, 

தமிழகத்தில் டிசம்பர் மாதம் 27, 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 2-ந்தேதி எண்ணப்பட்டு படிப்படியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. அந்த வகையில் தலா 27 மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர்களையும், தலா 314 ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர்களையும், 9,624 ஊராட்சி துணைத்தலைவர்களை தேர்ந்து எடுப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றன.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க அந்தந்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களும், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க அந்தந்த ஒன்றிய கவுன்சிலர்களும், ஊராட்சி துணைத் தலைவரை தேர்வு செய்ய அந்தந்த ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டனர்.

இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது.

தேர்தல் நடந்து முடிந்தவுடன் உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்ட பஞ்சாயத்துகளில் 13 மாவட்ட பஞ்சாயத்துகளை ஆளும் அ.தி.மு.க. கைப்பற்றியது. எதிர்க்கட்சியான தி.மு.க. 12 மாவட்ட பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றது.

ஒரு மாவட்ட பஞ்சாயத்தை அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ம.க. கைப்பற்றியது.

போதிய உறுப்பினர்கள் வராததால் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடைபெறவில்லை.

அ.தி.மு.க. கைப்பற்றிய மாவட்ட பஞ்சாயத்துகள் விவரம் வருமாறு:-

1.தர்மபுரி, 2. தேனி, 3.கரூர், 4.அரியலூர், 5.ஈரோடு, 6.தூத்துக்குடி, 7.கன்னியாகுமரி, 8.நாமக்கல், 9.புதுக்கோட்டை, 10.திருப்பூர், 11.கடலூர், 12.கோவை, 13.விருதுநகர்.

சேலம் மாவட்ட பஞ்சாயத்து பா.ம.க. வசமானது.

தி.மு.க. கைப்பற்றிய மாவட்ட பஞ்சாயத்துகள் விவரம் வருமாறு:-

1.திண்டுக்கல், 2.பெரம்பலூர், 3.தஞ்சை, 4.திருவாரூர், 5.திருவண்ணாமலை, 6.கிருஷ்ணகிரி, 7.திருவள்ளூர், 8.நாகை, 9.மதுரை, 10.திருச்சி, 11.ராமநாதபுரம், 12.நீலகிரி.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலை பொறுத்தமட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக 12 இடங்களிலும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர் வருகை இல்லாததால் 13 இடங்களிலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் உடல்நலக்குறைவு காரணமாக 2 இடங்களிலும் என மொத்தம் 27 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறவில்லை.

மீதமுள்ள 287 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. 140 இடங்களிலும், தி.மு.க. 125 இடங்களிலும், பா.ம.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பா.ஜ.க. 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 இடங்களிலும், அ.ம.மு.க. 2 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.


கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும், கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் தி.மு.க. பிடித்தது.

ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை பொறுத்தமட்டில் 314 பதவிகளில் 41 பதவிகளுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர் வருகை இல்லாததால் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 273 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

இதில், அ.தி.மு.க. 94 இடங்களிலும், தி.மு.க. 107 இடங்களிலும், பா.ம.க. 19 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், தே.மு.தி.க. 7 இடங்களிலும், அ.ம.மு.க. 5 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.