சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் பேர் விண்ணப்பம்; தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் பேர் விண்ணப்பம்; தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 Jan 2020 10:56 PM GMT (Updated: 11 Jan 2020 10:56 PM GMT)

சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே ஆயிரத்து 329 ஆகும். புதிய வாக்காளர்களை சேர்த்தும், திருத்தங்களை மேற்கொண்டும், அடுத்த மாதம் பிப்ரவரி 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாலும் இந்த மாதம் 4 சிறப்பு முகாம்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்களும் பட்டியலில் பெயர் சேர்ப்பதற் காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்த முகாம்களில் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு பலரும் விண்ணப்பித்தனர். அதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 4-ந் தேதியன்று பெயர் சேர்ப்புக்காக மட்டும் 2 லட்சத்து 61 ஆயிரத்து 369 விண்ணப்பங்களும், 5-ந் தேதியன்று 4 லட்சத்து 36 ஆயிரத்து 299 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

அந்த வகையில் பெயர் சேர்ப்பதற்காக மட்டும் 6 லட்சத்து 97 ஆயிரத்து 668 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த 2 நாட்கள் முகாம்களில் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களையும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 39 ஆயிரத்து 87 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. (4-ந் தேதி 3 லட்சத்து 10 ஆயிரத்து 47 மற்றும் 5-ந் தேதியன்று 5 லட்சத்து 29 ஆயிரத்து 40 விண்ணப்பங்கள்).

இந்த விண்ணப்பங்களை சரிபார்த்த பின்னர் அதிலுள்ள கோரிக்கைகள் ஏற்கப்படும். பொதுமக்களுக்கு மேலும் வாய்ப்பளிக்கும் வகையில் தற்போது 11 மற்றும் 12-ந் தேதிகளிலும் (நேற்றும், இன்றும்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story