இந்து என்று உச்சரித்தாலே சிலருக்கு ‘அலர்ஜி’ சென்னையில் நடந்த விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு


இந்து என்று உச்சரித்தாலே சிலருக்கு ‘அலர்ஜி’ சென்னையில் நடந்த விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2020 11:30 PM GMT (Updated: 12 Jan 2020 8:47 PM GMT)

சென்னையில் நடந்த விழாவில், எல்லா மதங்களுமே மரியாதைக்குரியவை தான் என்றும், இந்து என்று உச்சரித்தாலே சிலருக்கு ‘அலர்ஜி’ ஏற்பட்டு விடுகிறது என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை,

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் நூற்றாண்டு விழா, ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசுகையில் கூறியதாவது:-

விவேகானந்தரின் போதனைகள்

சுவாமி விவேகானந்தரின் போதனைகளையும், அவரது வாழ்வியல் தத்துவங்களையும் நாம் மறந்துவிட முடியாது. தனித்துவமான குரு, தன்னிகரில்லா ஆசிரியர், சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி என பன்முகங்கள் கொண்டவர், சுவாமி விவேகானந்தர். இந்தியாவில் ஆன்மிகத்தை வலியுறுத்தியதில் மிகவும் முக்கியமானவர் விவேகானந்தர்.

‘கிழக்கு பகுதிகளில் துன்பப்படுவோர் மற்றும் அகதிகளுக்கு புகலிடம் தந்த நாடு இந்தியா’ என்று விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதை உண்மை என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியதுள்ளது. அதை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் சர்ச்சைக்குரியதாக்கி பேசுவது வருத்தம் அளிக்கிறது. இச்சட்டம் குறித்து எவ்வளவோ விளக்கங்கள் கொடுக்கப்பட்ட பின்பும், விமர்சனங்கள் எழுவதை என்ன சொல்ல முடியும்?

இந்து என்றாலே ‘அலர்ஜி’

ஆனால் நமது கலாசாரம், பண்பாடு மற்றும் முன்னோர்களது கூற்றுகளை ஒருபோதும் மாற்றிவிட முடியாது. மக்களிடையே வேறுபாடுகளை, பிரச்சினைகளை சிலர் சுவர்கள் போல எழுப்பி இருக்கிறார்கள். அந்த சுவர்களை வீழ்த்தவேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு அது இப்போது அவசியமாக இருக்கிறது.

ஆனால் எல்லா மதங்களுமே மரியாதைக்குரியவை என்ற விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமது உடலில் ஓடிக்கொண்டிருப்பது இந்திய ரத்தம். எல்லா மதங்களையும் மதித்து நடப்பது இந்திய தன்மை. ஆனால் சிலருக்கு ‘இந்து’ என்று உச்சரித்தாலே போதும், ஒருவித ‘அலர்ஜி’ ஏற்பட்டு விடுகிறது. அவர்களை நாம் திருத்தமுடியாது. அவர்களுக்கும் எல்லோரையும் போல அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால் அவர்களது எண்ணம் தவறாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story