கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு ஆயுள் தண்டனை


கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 13 Jan 2020 6:54 AM GMT (Updated: 2020-01-13T12:24:07+05:30)

டெல்லியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தினேஷ், புருசோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூர், 

டெல்லியை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு  கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதனால் அவர் வேலை தொடர்பாக பயிற்சி பெற கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் சென்னையில் இருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இரவு 9.45 மணிக்கு வந்து இறங்கினார்.

ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், ஒரு ஆட்டோ டிரைவரிடம் தான் செல்ல வேண்டிய முகவரியை கொடுத்து அங்கு தன்னை கொண்டு சென்று விடுமாறு ஆங்கிலத்தில் கூறி உள்ளார். இதை சரியாக புரிந்து கொள்ளாத ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை செட்டிமண்டபம் பைபாஸ் சாலை பகுதிக்கு அழைத்து சென்றார்.

அப்போது ஏதோ விபரீதம் நடப்பதாக எண்ணிய அந்த பெண், ஆட்டோவில் இருந்தபடியே ஆங்கிலத்தில் கூச்சலிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பயந்துபோய் அந்த இளம்பெண்ணை பாதியிலேயே இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார்.

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற அந்த பெண், அந்த வழியாக வந்த ஒரு வாலிபரிடம் தன்னை, தான் செல்ல வேண்டிய முகவரிக்கு அழைத்து சென்று விடுமாறு கூறினார். அந்த வாலிபர், அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

அந்த வாலிபரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர் வந்தார். அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு மறைவான இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். பின்னர் மேலும் 2 பேரை அவர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் அவர்களில் ஒருவர் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மறித்து அந்த பெண்ணை ஏற்றி கும்பகோணத்துக்கு கொண்டு வந்து விட்டு சென்று விட்டார். அவர்கள் ஆட்டோவில் வந்தபோது பெண்ணுடன் வந்த வாலிபர், ஆட்டோ டிரைவரின் செல்போனை வாங்கி பேசியதாக தெரிகிறது.

இந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண், தனது வங்கிக்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார். இது குறித்து வங்கி நிர்வாகத்தின் உதவியோடு அந்த பெண் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண், செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் இருந்து கும்பகோணத்துக்கு தான் வந்து இறங்கிய ஆட்டோவின் எண், தன்னை அழைத்து வந்த நபர், ஆட்டோ டிரைவரிடம் இருந்து செல்போனை வாங்கி பேசியது மற்றும் அந்த நபர் கூறிய செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக போலீசாரிடம் கூறினார். இதன்மூலம் துரிதமாக செயல்பட்ட போலீசார், ஆட்டோ எண்ணை வைத்து தாராசுரம் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆட்டோ டிரைவரின் செல்போனில் அந்த இளம்பெண் கூறிய எண் பதிவாகி இருந்தது.

இந்த விபரங்களை வைத்து துப்பு துலக்கிய போலீசார், கும்பகோணத்தில் உள்ள அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (வயது 24), மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த் (21), மூப்பனார் நகரை சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன் (19), ஹலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (19) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தவழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில்  நீதிபதி எழிலரசி இன்று தீர்ப்பு வழங்கினார். 

தினேஷ், புருஷோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Next Story