நாடாளுமன்ற ஆட்சிமொழிக்குழு பொங்கல் விடுமுறையில் ஆய்வு நடத்துவதா? வைகோ கண்டனம்


நாடாளுமன்ற ஆட்சிமொழிக்குழு பொங்கல் விடுமுறையில் ஆய்வு நடத்துவதா? வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 6:19 PM GMT)

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

பொங்கல் விழா கொண்டாடும் ஜனவரி 14 (இன்று), 15, 16 ஆகிய 3 நாட்களில், மத்திய உள்துறை மந்திரி தலைமையிலான 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆட்சி மொழிக்குழு தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை மற்றும் பிற மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வுசெய்ய வர இருக்கிறது. எனவே, அந்த 3 நாட்களும் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழா பொங்கல் நாள் சிறப்பாக கொண்டாடப்படுவதை இந்துத்துவ மதவாத சனாதன சக்திகள் விரும்பவில்லை என்பதையே இதுபோன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இந்தி திணிப்பை எதிர்த்து போர்க்கோலம் பூணும் தமிழகத்தில் தான் இந்திமொழியின் அலுவல் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்த நாடாளுமன்ற ஆட்சிமொழிக்குழு வருகிறது. அதுவும் பொங்கல் விடுமுறை நாட்களில் என்றால் பா.ஜ.க. அரசின் நோக்கத்தை தமிழக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பொங்கல் விடுமுறை நாட்களில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக்குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தும் பயணத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story