டெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை; தஞ்சை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


டெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை; தஞ்சை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Jan 2020 11:00 PM GMT (Updated: 13 Jan 2020 6:49 PM GMT)

டெல்லி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர்கள் 4 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

தஞ்சாவூர், 

டெல்லியை சேர்ந்த 27 வயதான இளம்பெண்ணுக்கு கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக அவர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி ரெயில் மூலம் சென்றார்.

கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்த அந்த இளம்பெண், ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ டிரைவர் அவரை குறிப்பிட்ட விடுதிக்கு அழைத்துச்செல்லாமல் புறவழிச்சாலை பகுதிக்கு அழைத்துச்சென்றார். இதனால் பயந்து போன அந்த பெண் ஆட்டோவில் இருந்து தனது உடைமைகளுடன் கீழே குதித்தார். ஆட்டோ டிரைவர் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பகோணத்தை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 26), வசந்தகுமார்(23), புருஷோத்தமன்(21), அன்பரசன்(21) ஆகியோர் டெல்லி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவரை அடித்து உதைத்ததோடு கொலை செய்வதாக மிரட்டினர். பின்னர் ஒரு ஆட்டோவில் ஏற்றி அந்த பெண்ணை விடுதிக்கு அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் உள்ளிட்ட 4 பேரையும், அந்த பெண்ணை முதலில் ஆட்டோவில் அழைத்துச்சென்ற கும்பகோணம் திருப்பணிப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி (26) என்பவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. சம்பவம் நடந்து 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவாளிகளான தினேஷ்குமார், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். அவர்கள் இறந்த பின்பு அவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் 4 பேருக்கும் தலா ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

அபராத தொகையில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் இழப்பீடு போதவில்லை என கூறினால், அரசிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவ வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

இதையடுத்து 5 பேருக்கும் தண்டனையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 84-வது நாளிலேயே 700 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்தார். தினேஷ்குமாரின் செல்போனில், பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்துள்ளனர். இதனை போலீசார் கோர்ட்டில் ஆதாரமாக தாக்கல் செய்தனர். அந்த வீடியோவில் அந்த பெண்ணை அடித்து உதைத்து, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

மேலும் டி.என்.ஏ. பரிசோதனையிலும் அந்த பெண்ணை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. வீடியோ ஆதாரமும், டி.என்.ஏ. பரிசோதனையும் தண்டனை கிடைக்க காரணமாக அமைந்தது. திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன், உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்த போலீசாருக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

Next Story