தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை; எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை; எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:30 PM GMT (Updated: 13 Jan 2020 8:13 PM GMT)

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதுகுறித்து கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் 2019-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதியன்று அவை விதி 110-ன் கீழ், கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கவும் மற்றும் வெளிக்கொணரவும் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, கிளாய் ஊராட்சி விளையாட்டு மைதானத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டத்தை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக தொடக்கிவைத்தார். அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் இலச்சினையையும் அவர் வெளியிட்டார்.

அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக “அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு” அமைக்கப்படும்.

மேலும், அனைத்து ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கபடி, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் அல்லது பூப்பந்து அல்லது இதர விளையாட்டுகள், இவற்றில் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு ஆடுகளங்கள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் மற்றும் விளையாட்டு போட்டிகளை ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்துதல் போன்ற இனங்கள் செயல்படுத்தப்படும்.

இளைஞர்களிடையே தலைமை பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மையினை உருவாக்குதல், கிராமங்களில் உள்ள விளையாட்டுத் திறன்மிக்க இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

மேலும், திருச்சி மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதி கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

நேபாள நாட்டின் காத்மாண்டு மற்றும் பொகாராவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் 10-ந்தேதிவரை நடைபெற்ற 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசிய கண்டத்தை சேர்ந்த 7 நாடுகள் கலந்து கொண்டன. இந்தியாவின் சார்பில் 487 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய அணி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 174 தங்கம், 93 வெள்ளி மற்றும் 45 வெண்கலம் என மொத்தம் 312 பதக்கங்களை வென்று முதலிடம் பெற்றது.

இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 2 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார்.

இரண்டாவது தேசிய தீயணைப்பு விளையாட்டுகள் மற்றும் தீயணைப்பு சேவை விளையாட்டு போட்டிகள் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 16 மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் தீயணைப்பு பிரிவு, என 700 தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டுப் போட்டிகளில் தொழில் ரீதியாக முக்கியமானதாக கருதப்படும் ‘அல்டிமேட் பயர் பைட்டிங் டிரில்’ போட்டியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர் சி.கோவிந்தசாமி தங்கப்பதக்கமும், எம்.சசிகுமார் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இப்போட்டியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு மொத்தம் 15 தங்கம், 18 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள்.

பதக்கங்களை வென்ற 33 தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புப் படை, பொதுமக்களுக்கான சிறப்பான சேவை மற்றும் கடலோரப் பாதுகாப்பினை வலுப்படுத்த எடுத்த முன்னெடுப்புகளுக்காகவும், நாட்டின் முன்மாதிரியான அமைப்பாக விளங்குவதற்காகவும் வழங்கப்பட்ட 2019-ம் ஆண்டிற்கான ஸ்கோச் தங்க விருது மற்றும் தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு விருது ஆகிய இரு தேசிய அளவிலான விருதுகளை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று கடலோர பாதுகாப்பு படையின் காவல்துறை கூடுதல் இயக்குனர் கே.வன்னிய பெருமாள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச்சாளர அனுமதிகளுக்கான 2-வது உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.

ஏற்கனவே நடந்த முதல் கூட்டத்தில் ரூ.8 ஆயிரத்து 120 கோடி முதலீடுகளில் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், 21 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த 2-வது கூட்டத்தில் பல்வேறு நிலைகளில் இருந்த 15 தொழில் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் ரூ.6 ஆயிரத்து 608 கோடி அளவுக்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து சுமார், 6 ஆயிரத்து 763 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்கும் வாய்ப்பு உறுதியாகி உள்ளது.

இத்திட்டங்கள் தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story