மாநில செய்திகள்

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிர்ப்பு:அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம்மு.க.ஸ்டாலின் அறிவிப்பு + "||" + DMK soon to condemn government Struggle The announcement of MG Stalin

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிர்ப்பு:அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம்மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிர்ப்பு:அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம்மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்காவிட்டால் அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம் நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, 

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்காவிட்டால் அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம் நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி

நாடு முழுவதும் மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்ற நேரத்தில், “தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்” உள்ள வேறுபாடு தெரியாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக்களித்து நாடு முழுவதும் போராட்டமும், கலவரமும் ஏற்பட காரணமான அ.தி.மு.க. அரசு, பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்திற்கே ஏற்க மறுத்தது. கேரள மாநில அரசு “குடியுரிமை திருத்த சட்டத்திருத்தம் 2019-ஐ திரும்ப பெற வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், அதைப் பின்பற்றி ஒரு தீர்மானத்தை அரசின் சார்பில் நிறைவேற்ற தைரியம் இன்றி அஞ்சி நடுங்கி மத்திய பா.ஜ.க. அரசிற்கு ‘கைகட்டி’ நின்றது அ.தி.மு.க. அரசு.

அ.தி.மு.க. ஆதரவளித்தது

இந்நிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தற்போது புதிய படிவம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளும், மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையானவை என்ற விவரங்களும் பொதுவெளிக்கு வந்துவிட்டன. மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக போராடிக்கொண்டிருக்கின்றன.

“தேசிய குடிமக்கள் பதிவேடு” தயாரிக்கும் 2003-ம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்த கட்சி அ.தி.மு.க. இப்போது ஈழத் தமிழர்களையும், சிறுபான்மையின மக்களையும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஆதரவளித்ததும் அ.தி.மு.க.

தி.மு.க. போராட வலியுறுத்தல்

“இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை கேட்டுள்ளோம்” என்று இப்போது கூறும் அ.தி.மு.க. அந்த நிலைக்குழு கூட்டத்தில் அதுபற்றி ஒரு முணுமுணுப்பைக்கூட காட்டவில்லை. இப்போது அந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்களித்து வெற்றிபெற வைத்தது அ.தி.மு.க. நாட்டையே ரணகளமாக்கியுள்ள சட்டத்திருத்தத்திற்கு ஆதரவளித்து விட்டு, இன்றைக்கு “மக்களுக்கு பாதிப்பு இல்லை” “என்.பி.ஆர், என்.சி.ஆர் பற்றி எங்களுக்கு அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை” என்றெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி வருவதை உடனடியாக அ.தி.மு.க. நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நேற்றைய தினம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் என்னை சந்தித்து “தேசிய மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்கும் வரை தி.மு.க. போராட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பிடிவாதம்

ஏற்கனவே தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு வழிகோலும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. வாக்களித்துள்ளது. அச்சட்டம் நிறைவேறிய பிறகு அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பிரமாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறோம்.

சட்டமன்றத்திலும் இது குறித்து வலியுறுத்தி அ.தி.மு.க. அரசிற்கு போதிய அழுத்தம் கொடுத்துள்ளோம். ஆனாலும் அ.தி.மு.க. அரசு “நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்று பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த அலட்சியமான மூன்று கால் மனப்பான்மையை தி.மு.க. மட்டுமல்ல தமிழக மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

போராட்டம்

ஆகவே, தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்களுக்கு நெருக்கடியும் துயரமும் அளிக்கும் கணக்கெடுப்பு குறித்து, தொடர்ந்து அ.தி.மு.க. அரசு அமைதி காத்தால், விரைவில் மாபெரும் போராட்டத்தை நாடே திரும்பிப் பார்க்கும் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் தி.மு.க. நடத்திடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.