மாநில செய்திகள்

போகி பண்டிகையால் புகை மூட்டம்:சென்னையில் 42 விமானங்கள் தாமதம்முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் பயணம் + "||" + Smoke by Pogi Festival: 42 flights delayed in Chennai

போகி பண்டிகையால் புகை மூட்டம்:சென்னையில் 42 விமானங்கள் தாமதம்முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் பயணம்

போகி பண்டிகையால் புகை மூட்டம்:சென்னையில் 42 விமானங்கள் தாமதம்முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் பயணம்
போகி பண்டிகையால் சென்னை நகரம் புகையால் சூழ்ந்தது. இதனால் 42 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.
சென்னை, 

போகி பண்டிகையால் சென்னை நகரம் புகையால் சூழ்ந்தது. இதனால் 42 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் பயணித்தனர்.

போகி பண்டிகை

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் போகி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மக்கள் வீட்டில் உள்ள பழைய, வேண்டாத பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள். இந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பழைய பொருட்களை தீ வைத்து எரித்தனர். அதிகாலை முதலே கொளுத்தியதால் புகை மூட்டம் ஏற்பட்டது. ஏற்கனவே பனிமூட்டம் இருந்ததால், இந்த புகை அதிகப்படியாகவே தங்கிவிட்டது. இதனால் சென்னை நகரம் முழுவதும் புகையால் சூழ்ந்தது.

42 விமானங்கள் தாமதம்

கடும்புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று காலை 7 மணிக்கு மேல் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி சென்னை விமான நிலையத்துக்கு மஸ்கட், சார்ஜா, அபுதாபி, கோலாலம்பூர், சிங்கப்பூர், ஐதராபாத், திருவனந்தபுரம், மும்பை, புனே, பெங்களூரு, ஆமதாபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து வர வேண்டிய 16 விமானங்கள் புகை மூட்டத்தால் தாமதமாக வந்தன.

அதேபோல் சென்னையில் இருந்து மும்பை, ஐதராபாத், பெங்களூரு, வாரணாசி, கோவை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொல்கத்தா, கொச்சி, மஸ்கட், அபுதாபி, கோலாலம்பூர், கொழும்பு, சிங்கப்பூர், துபாய், லண்டன் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய 26 விமானங்களும் சுமார் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

முதல்-அமைச்சர்

மொரீசியசில் இருந்து பெங்களூரு வழியாக காலை 6.15 மணிக்கு சென்னை வந்துவிட்டு மீண்டும் காலை 7.45 மணிக்கு சென்னையில் இருந்து மொரீசியஸ் செல்லும் விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது. விமான சேவைகள் பாதிப்பால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து சேலத்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்ல இருந்த விமானமும் காலை 10.25 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11.25 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மேளம் அடித்து உற்சாகம்

சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே வீட்டில் உள்ள பழைய பொருட்களை மக்கள் தீயிட்டு எரித்தனர். கொளுந்து விட்டு எரியும் தீயின் முன்பு சிறுவர்கள் மேளம் அடித்து உற்சாகமாக போகியை கொண்டாடினர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு வந்துள்ளார். அவரும், தனது குடும்பத்தினருடன் போகி பண்டிகையை கொண்டாடினார்.

புகை சூழ்ந்தது

தெருக்களில் கொசு மருந்து அடித்ததைப்போலவே புகை சூழ்ந்திருந்தது. எதிரே இருப்பவர்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்பட்டதால் மக்கள் தயங்கி தயங்கி நடந்து சென்றதை பார்க்க முடிந்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணம் செய்தனர். தெருக்களில் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியபடியே சென்றனர்.

அதிக புகை காரணமாக மூச்சுத்திணறல், இருமல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளாலும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ‘போகி பண்டிகையால் ஏற்பட்ட ஒரு நல்ல விஷயம், இரவில் கொசுத்தொல்லை இல்லாமல் நிம்மதியாக தூங்கினோம்’ என்று சிலர் பெருமைப்பட்டு கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...