சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது ஏன்? பயங்கரவாதிகள் பரபரப்பு தகவல்


சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது ஏன்? பயங்கரவாதிகள் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 16 Jan 2020 10:30 PM GMT (Updated: 16 Jan 2020 8:45 PM GMT)

களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது ஏன்? என்பது குறித்து பயங்கரவாதிகள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நாகர்கோவில், 

களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது ஏன்? என்பது குறித்து பயங்கரவாதிகள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் (28) ஆகிய 2 பயங்கரவாதிகளை வடமாநிலத்துக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் நேற்று முன்தினம் இரவில் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர்.

துருவி, துருவி விசாரணை

நேற்று காலை 5 மணியில் இருந்து சுமார் 1½ மணி நேரம் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காலை 7 மணிக்கு தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 2 பேரிடமும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை இரவு 8 மணி வரையில் 13 மணி நேரம் நடந்தது. விசாரணை முடிந்து குழித்துறை கோர்ட்டுக்கு பயங்கரவாதிகளை அழைத்துச்சென்று ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்திருந்ததால் கோர்ட்டு வளாகம் மற்றும் கோர்ட்டுக்கு வெளியே அதிரடிப்படை போலீசாரின் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இருந்தது.

விசாரணையின்போது பயங்கரவாதிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை செய்தது ஏன்?

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீமுக்கு சிறையில் இருந்தபோது பல அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது காஜா முகைதீனை தலைவராக கொண்டு செயல்பட வேண்டும் என திட்டமிட்டு உள்ளனர். அதன்படி புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி 17 பேர் அதில் செயல்பட்டுள்ளனர். காஜா முகைதீனுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கிடைத்து வந்ததாக கூறப்படுகிறது. மும்பையில் தங்கி இருந்த இவர்கள் பல்வேறு சதி திட்டங்கள் தீட்டியதும் தெரியவந்துள்ளது.

காஜா முகைதீன் கைது செய்யப்பட்ட பிறகு இந்த அமைப்பை சேர்ந்த பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 17 பேரில் 15 பேரை போலீசார் சென்னை, டெல்லி, கர்நாடக பகுதிகளில் கைது செய்ததாக கூறப்படுகிறது. அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர்தான் வெளியில் இருந்துள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த இயக்கத்துக்கும், தங்களுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து, கைது நடவடிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கு தங்களது எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று அப்துல் சமீமும், தவுபிக்கும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 8-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்திருக்கிறார்கள். இந்த இடத்தை தவுபிக்தான் தேர்வு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முன்விரோதம் இல்லை

வில்சனுக்கும், பயங்கரவாதிகள் 2 பேருக்கும் இடையே எந்த முன்விரோதமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த சோதனைச்சாவடியில் சம்பவத்தன்று எந்த சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்தாலும் கொலை செய்திருப்போம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். எங்களது நோக்கம் போலீசாருக்கு எதிராக எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இந்த கொலையை செய்ததாக கூறியுள்ளனர்.

இதற்காக ஏற்கனவே 2 பேரும் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் யார் இந்த பயிற்சியை அளித்தது என்பதை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்துக்காக தாங்கள் கொலை செய்யப்பட்டாலும் அதற்காக கவலைப்படவில்லை என்றும், தங்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு யாருக்கும் தங்களது அமைப்பு ரீதியான தொடர்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

3 மாத கர்ப்பிணி

கைது செய்யப்பட்டுள்ள தவுபிக்குக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளதாகவும், அவருடைய மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருந்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story