கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு டிரைவர் படுகொலை முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு டிரைவர் படுகொலை முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Jan 2020 10:30 PM GMT (Updated: 17 Jan 2020 8:57 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு டிரைவர் படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி,

கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேன் டிரைவர்

கிருஷ்ணகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் மாரிமுத்து (வயது 30). வேன் டிரைவர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டில் இருந்த அவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரை என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்து உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

கள்ளத்தொடர்பு

கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவிற்கும், கிருஷ்ணகிரி காமராஜ் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தீர்த்த செல்வன் என்பவரின் மனைவி ஈஸ்வரி (37) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இது குறித்து அறிந்த ஈஸ்வரியின் கணவர் தீர்த்தசெல்வன், மாரிமுத்துவை கண்டித்தார். ஆனாலும் அவர் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். இது தீர்த்த செல்வனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் தனது நண்பரான தாளாப்பள்ளி பக்கமுள்ள கோடியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் கூறினார். இதனால் கோவிந்தராஜ், மாரிமுத்துவை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி வந்தார்.

நண்பர் அழைத்து வந்தார்

மாரிமுத்துவை அழைத்து வர அவரது நண்பரான காமராஜ் நகரை சேர்ந்த கேசவன் உதவியை கோவிந்தராஜ் நாடினார். அதன்படி நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து, அவரது மாமா எல்லப்பன், நண்பர் கேசவன், ராஜ்குமார் ஆகிய 4 பேரும் காமராஜ் நகர் பகுதியில் உள்ள ஏரிக்கரை என்னும் இடத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் 4 பேரும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது கோவிந்தராஜ் அங்கு வந்தார்.

அவர் மாரிமுத்துவிடம் கள்ளக்காதல் குறித்து கேட்டு தகராறு செய்தார்.அப்போது மாரிமுத்துவுடன் வந்த ராஜ்குமார், எல்லப்பன் ஆகிய 2 பேரும் சண்டையை விலக்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.

கல்லைப்போட்டு கொலை

பின்னர் கேசவன், “நீ கூறியபடி மாரிமுத்துவை இங்கு அழைத்து வந்து விட்டேன். அவன் கதையை முடித்து விட்டு வா” என்று கூறி சென்றார். இதையடுத்து கோவிந்தராஜ், மது போதையில் இருந்த மாரிமுத்துவின் தலையில் பாறாங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார்.

மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் தீர்த்த செல்வன், அவரது நண்பர் கோவிந்தராஜ், கேசவன் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story