முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினி பேச்சுக்கு முரசொலி நாளிதழ் பதில்


முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினி பேச்சுக்கு முரசொலி நாளிதழ் பதில்
x
தினத்தந்தி 18 Jan 2020 7:59 AM GMT (Updated: 18 Jan 2020 7:59 AM GMT)

முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினி பேச்சுக்கு முரசொலி நாளிதழ் பதில் அளித்துள்ளது.

சென்னை

துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா சென்னையில்  நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மக்களுக்கு சேவை செய்வது என்பது தந்தைக்குரிய பதவி. அந்த மாபெரும் சேவையை சோவை தொடர்ந்து துக்ளக் இதழை சிறப்பாக கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. சோ ஒரு மிகச்சிறந்த அறிவாளி. அவர் அறிவாளி என்பதை நிரூபிக்க தேர்ந்தெடுத்த துறை  பத்திரிக்கை துறை. அதில் அவர் எடுத்த ஆயுதம் துக்ளக். இந்த துக்ளக் இதழை, சோ ராமசாமியையும், துக்ளக்கையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்களில் இருவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் பக்தவத்சலம்.

முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். தற்போதைய சூழலில் காலம், அரசியல், சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. துக்ளக் சோவிற்கு பிறகு, இந்த துக்ளக் பத்திரிகை நடத்தப்படும் என இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை.

சோ மாதிரியான பத்திரிக்கையாளர் தான் தற்போது மிக அவசியம். பால் போன்ற உண்மை செய்தியில் தண்ணீரை கலக்கக் கூடாது. கவலைகளை  நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில்தான் உள்ளது. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினிக்கு முரசொலி நாளிதழ் தலையங்கம் சுட்டிக் காட்டி உள்ளது.

முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள். அதுவும் திராவிட இயக்கத் தமிழன் என்று பொருள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற  உன்னதக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள். எல்லோர்க்கும் எல்லாம் என்ற சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடியின் இன்றைய குடிமக்கள் என்று பொருள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பவன் என்று பொருள்.

முரசொலி வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கிவிட்டவன் என்று பொருள். இனியும் ஒடுங்க மறுப்பவன் என்று பொருள். ஒடுக்கியவர் திமிர் ஒடுங்க ஒன்று சேர்ப்பவன் என்று  பொருள். 

எத்தனை மிக மிக என்றும் போட்டுக் கொள்ளுங்கள் என்று பொருள். மிக மிக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவன் என்று பொருள். தான் யாருக்கும் அடிமையில்லை. தனக்கும் யாரும் அடிமையில்லை என்பவன் என்று பொருள்.

முரசொலி வைத்திருந்தால் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பவன் என்று பொருள். பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்குபவன் என பொருள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பவன் என்று பொருள்.

முரசொலி வைத்திருந்தால் தமிழ் காப்போன் என பொருள். தமிழர் நலன் காப்போன் என்று பொருள். தமிழ்நாடு காப்போன் என்று பொருள். வாழ்ந்த இனம், வீழ்ந்ததன் வரலாறும் வீழ்ந்த இனம் மீண்டும் வாழச் சரியான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டவன் என்று பொருள்.

யார் எதிரி, யார் நண்பன் என்பதை உணர்ந்து விட்டவன் என்று பொருள்.  எதிரிகளோடு எச்சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாதவன் என பொருள், முரசொலி வைத்திருந்தால் ஆண்டான், அடிமைக்கு எதிரானவன் என்று பொருள்.

சாதிச் சதியை எதிர்ப்பவன், மத மாச்சர்யங்களை வெறுத்தவன் என்று பொருள். சாதி பேதம், மத பேதம் பார்க்காதவன் என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட உடன்பிறப்பு என பொருள். முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் மனிதன் என்று பொருள் என அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story