மாநில செய்திகள்

கே.எஸ்.அழகிரி கருத்தால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிதமிழக காங்கிரஸ் தலைவர்கள்மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு + "||" + Tamil Nadu Congress leaders Meeting with MK Stalin

கே.எஸ்.அழகிரி கருத்தால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிதமிழக காங்கிரஸ் தலைவர்கள்மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

கே.எஸ்.அழகிரி கருத்தால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிதமிழக காங்கிரஸ் தலைவர்கள்மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.
சென்னை, 

தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. உரிய ஒதுக்கீடு வழங்கவில்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தலைவர் பதவி இடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அவர் வெளியிட்ட இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தி.மு.க. தலைமைக்கு கடும் நெருக்கடியை தந்தது. அதற்கேற்ப மறைமுக தேர்தலில் தி.மு.க.வால் அதிக அளவு மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி இடங்களை கைப்பற்ற முடியவில்லை. இதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று தி.மு.க.வினர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியே இல்லை என்றும், அந்த கட்சி தங்களிடம் இருந்து விலகிச் சென்றாலும் கவலை இல்லை என்றும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பில் இருந்து கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. அறிக்கை விட்டார். இரு தரப்பிலும் வார்த்தை போர் நீடித்து வந்ததால் கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கிடையே, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க. கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. இதனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை கே.எஸ்.அழகிரியை டெல்லிக்கு அழைத்து, தி.மு.க.வுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர சமாதான தூது விடும் முயற்சி தொடங்கியது. நேற்று காலை புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலினை சந்தித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விருப்பம் தெரிவித்து, அதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்டு இருந்தார். அதன்படி நேற்று மதியம் 12.25 மணிக்கு தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோரும் சென்று இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, கே.எஸ்.அழகிரி தான் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளித்தார். கூட்டணி தொடருவது பற்றியும், இரு கட்சிகளின் தொண்டர்களும் சமாதானமாக நடந்து கொள்வது பற்றியும் பேசப்பட்டது.

இந்த சந்திப்பின் முடிவில் மு.க.ஸ்டாலின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், இரு கட்சி தொண்டர்களும் கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் உடனான உங்கள் சந்திப்பில் சமரசம் ஏற்பட்டு உள்ளதா?

பதில்:- எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. எங்களுக்கு தோன்றிய ஒரு கருத்தை சொன்னோம். ஒரு குடும்பம் என்றால் ஊடலும், கூடலும்தான் இருக்கும். ஆனால் அதில் கோபமும், தாபமும் கிடையாது. எப்போதும் நாங்கள் ஒன்றுமையாகத்தான் இருப்போம். இனி வரும் தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம். பொதுவாக ஒரு பிரச்சினை என்று வரும்போது பல கருத்துகளும் பல இடங்களில் இருந்து வரும். எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றுதான் சொல்கிறோம். கருத்துவேறுபாடு வந்தால் இரு கட்சிகளும் பேசி தீர்த்துக்கொள்ளும்.

கேள்வி:- காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி இல்லை என்று துரைமுருகன் காட்டமாக கூறி இருக்கிறாரே? அதற்கு கார்த்தி ப.சிதம்பரம் பதில் அளித்து இருக்கிறாரே?.

பதில்:- அதெல்லாம் இப்போது தேவை இல்லை. அவரவர் கட்சி சார்பில் அவரவர் கருத்து தெரிவித்தார்கள். அதன்பின்னர் அமைதியாகி விட்டார்கள். அதனால் அதைப்பற்றி பேச வேண்டாம்.

கேள்வி:- கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் வெற்றி பெற முடியாதா? கூட்டணியை பொறுத்துதான் காங்கிரஸ் செல்வாக்கு இருக்கிறதா?

பதில்:- நாங்கள் மட்டுமல்ல உலகத்தில் யாராலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது.

கேள்வி:- உங்கள் கூட்டணி விரிசல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசன் ஆகியோர் கருத்து தெரிவித்து இருக்கிறார்களே?

பதில்:- கமல்ஹாசன் ஒரு பக்கம் மதசார்பற்ற கட்சிகளுடைய ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்கிறார். இன்னொரு பக்கம் ரஜினி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று நன்கு தெரிந்தும் கூட ரஜினி எங்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்கிறார். அப்படியானால் பா.ஜ.க.வின் உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா? என்று தெரியவில்லை.

விவாதம் செய்தால்தான் நல்ல நட்பு வரும். விவாதம் செய்யாமல் எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டுகிறவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது. அதனால் தி.மு.கவும், காங்கிரசும் சிறந்த நட்புடைய கட்சிகள்.

கேள்வி:- வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. நகராட்சி, மாநகராட்சிகளில் அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பீர்களா?

பதில்:- தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, இரு கட்சிகளும் உட்கார்ந்து பேசி இதுபற்றி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.