சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தந்தி டி.வி. பேட்டி ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘யூ-டியூப்’பில் பார்த்தனர்


சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தந்தி டி.வி. பேட்டி ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘யூ-டியூப்’பில் பார்த்தனர்
x
தினத்தந்தி 19 Jan 2020 12:00 AM GMT (Updated: 18 Jan 2020 8:04 PM GMT)

சொந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடியது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுக்கப்பட்ட பேட்டி தந்தி டி.வி.யில் ஒளிபரப்பானது.

சென்னை, 

சொந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடியது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுக்கப்பட்ட பேட்டி தந்தி டி.வி.யில் ஒளிபரப்பானது. இதனை ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘யூ-டியூப்’பில் பார்த்தனர்.

சொந்த ஊரில் பொங்கல்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம்.

அதேபோன்று, இந்த ஆண்டு தனது சொந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய அவரிடம் தந்தி டி.வி. சார்பில் பேட்டி காணப்பட்டது. இந்த ஒரு மணி நேர பேட்டி தந்தி டி.வி.யில் நேற்றும், நேற்று முன்தினமும் ‘முதல்வன்’ என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டது.

2 லட்சத்துக்கும் மேற்பட்டோர்...

தந்தி டி.வி. சார்பில் இந்த பேட்டி நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு ‘யூ-டியூப்’பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதேபோன்று தந்தி டி.வி.யில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பொங்கல் வாழ்த்தின் குரல் பதிவு 30 லட்சம் பேருக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அ.தி.மு.க.வின் பேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் இந்த பேட்டி அதிக அளவில் பகிரப்பட்டது. இதனை ஏராளமானோர் பார்த்தனர்.

தந்தி டி.வி. சார்பில் ‘யூ-டியூப்’பில் பதிவேற்றப்பட்ட இந்த பேட்டியை ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்தனர். நேற்று இரவு 7.45 மணி வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 82 பேர் பேட்டியை பார்த்துள்ளனர். அதில் ஏராளமானோர் முதல்-அமைச்சரை வரவேற்று தங்கள் விருப்பத்தை(லைக்) தெரிவித்து இருந்தனர். அதேபோல் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

போலித்தன்மை, பந்தா இல்லை

அதில், ஸ்ரீ ஸ்ரீபன் என்பவர், “உங்கள் எளிமையே உங்கள் வலிமை. உங்கள் அரசியல் பயணம் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். ராஜா என்பவர், “தமிழகத்தின் முதல் விவசாய முதல்வர். நீண்ட நாட்களுக்கு பிறகு பச்சை தமிழன் முதல்வராக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

சந்தோஷ்குமார் என்பவர் “நீங்கள் எத்தகைய மாணவர்? என்ற கேள்விக்கு நான் சாதாரண மாணவன் என்றும், நீங்கள் முதல்-அமைச்சர் ஆன பிறகு உங்கள் தாயார் உங்களை எவ்வாறு பார்க்கிறார்? என்ற கேள்விக்கு நான் முதல்-அமைச்சர் என்பதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றும், உங்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள்? என்ற கேள்விக்கு அங்கு அமெரிக்கர்கள் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொண்டு இருந்தனர். அமெரிக்காவில் கடின உழைப்பை கற்றுக்கொண்டேன் என்ற பதிலும், உங்கள் மனைவி உங்களுக்கு எப்படி உறுதுணையாக இருக்கிறார்? என்ற கேள்விக்கு அவர் அவரது வேலையை பார்க்கிறார். நான் எனது வேலையை பார்க்கிறேன் என்ற யதார்த்தமான பதில்கள் தங்களிடம் போலித்தனம் இல்லாததையும், பந்தா இல்லாததையும் காண்பித்தது” என்று தெரிவித்துள்ளார்.

கரும்பு மனிதர்

எஸ்.ஆர்.எஸ். என்பவர் “ஒரு விவசாயி முதல்வராக இருப்பது பெருமையாக உள்ளது. வர, வர இவர் மீது மரியாதையும், நம்பிக்கையும் கூடுகிறது. நீடூழி வாழ்க” என்று தெரிவித்துள்ளார். எஸ்.காமேஷ் என்பவர் “உண்மை உழைப்பு உயர்வு தரும். அதற்கு எடுத்துக்காட்டு நம் முதல்வர். இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் எடப்பாடியார்” என்று கூறியுள்ளார்.

முகமது ஆசிப் என்பவர், “நான் எந்த கட்சியையும் சாராதவன். உங்களிடம் பிடித்தது நீங்கள் ஒரு எளிமையான தமிழன் மற்றும் உங்கள் தைரியம் அனைத்தையும் விட உங்கள் புன்னகை. இனி நீங்கள் மட்டுமே உங்கள் காலம் இருக்கும் வரை முதல்வராக இருந்து சிறந்த ஆட்சியை தர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பண்பாட்டை திருப்பி காட்டுகிறது

கதிர்வேல் முருகேசன், “முதல்-அமைச்சர் பதவிக்கு 24 மணி நேரம் போதாது என்று நெறியாளர் சொல்லும்போது, அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாவற்றுக்கும் நேரம் இருக்கிறது என்று சொல்கிறார். மற்றவர்களாக இருந்தால் ஆமா...ஆமா... நிக்க நேரமில்லை என்று அளந்து விட்டு இருப்பார்கள்... அருமை முதல்வரே...” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் சாக்கோ, “படிச்ச படிப்புக்கு நிறைய பேர் விவசாயத்தை கேவலமா நினைக்கிற இந்த காலத்துல முதல்வராகியும் நம்ம பண்பாட்டை மறக்காம இருக்கிற இப்படி ஒரு முதல்வர் கிடைத்தது நமது பண்பாட்டை திருப்பி காட்டுது” என்று தெரிவித்துள்ளார். குட்டி தமிழ் என்பவர், “நன்றி தந்தி டி.வி., அரசியலையும் தாண்டி முதல்வரின் இன்னொரு எளிமையான வாழ்க்கையை காண்பித்ததற்கு” என்று தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இன்று மறுஒளிபரப்பு

இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேட்டி, தந்தி டி.வி.யில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Next Story